ஊக்கத்தொகை கிடைக்கவில்லை ; பால் உற்பத்தியாளர்கள் தவிப்பு
அன்னுார்; ஊக்கத்தொகை வழங்கப்படாததால், பால் உற்பத்தியாளர்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தமிழகத்தில் தினமும், 30 லட்சம் லிட்டர் பால் சராசரியாக ஆவினுக்கு பால் உற்பத்தியாளர்கள் வழங்கி வருகின்றனர். தீவன விலை உயர்வு, தொழிலாளி கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பால் கொள்முதல் விலை கட்டுபடி ஆவதில்லை என விவசாயிகள் தெரிவித்ததையடுத்து அரசு ஒரு லிட்டர் பாலுக்கு மூன்று ரூபாய் ஊக்க தொகை வழங்குவதாக கடந்தாண்டு அறிவித்தது.ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒரு முறை ஆவினுக்கு சப்ளை செய்யப்பட்ட பாலுக்கு கொள்முதல் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் ஊக்கத்தொகை ஒரு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும் தாமதமாக வழங்கப்படுகிறது.இது குறித்து பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'பிப்ரவரி மாதம் சப்ளை செய்த பாலுக்கு இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. ஏற்கனவே தீவன விலை உயர்வு மற்றும் கட்டுபடியாகாத பால் கொள்முதல் விலையால் சிரமப்பட்டு வருகிறோம். இந்நிலையில் ஊக்கத்தொகையும் தாமதப்படுத்துவதால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளோம். உடனுக்குடன் பாலுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்,' என்றனர்.