மேலும் செய்திகள்
மார்க்கெட்டுக்கு 272 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம்
05-Feb-2025
அன்னுார், ; கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக, நிலம் கையகப்படுத்த, அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தேசிய நெடுஞ்சாலை என்.எச்.. 209 (புதிய எண் 948) திண்டுக்கல்லில் துவங்கி, பொள்ளாச்சி, கோவை, சரவணம்பட்டி, அன்னூர், புளியம்பட்டி, சத்தி, பண்ணாரி வழியாக கர்நாடக மாநிலம், பெங்களூரு வரை செல்கிறது.கோவில்பாளையம், அன்னுார், புளியம்பட்டி, சத்தி ஆகிய நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையை அகலப்படுத்த வேண்டும் அல்லது புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என, 25 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் கூறி வந்தன. இதையடுத்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதன்படி சரவணம்பட்டி அடுத்த குரும்பபாளையத்தில் துவங்கி ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு 2.5 கி.மீ., தள்ளி இணையாக புதிய நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.பெரும்பாலான இடங்களில், புறவழிச் சாலையாகவும், சில இடங்களில் ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலையிலும் விரிவாக்கம் அமைகிறது. பண்ணாரி வரை நான்கு வழிச்சாலையாகவும் அதன் பிறகு இருவழிச் சாலையாகவும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக பொதுமக்களிடமிருந்து 926 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. எனினும் ஒரே ஆண்டில் நோட்டீஸ் காலாவதியானது. இந்நிலையில் மீண்டும் நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அறிவிப்பு விபரம்
தமிழக அரசின், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு)நெடுஞ்சாலை திட்டங்கள், வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பொதுப்பணிக்காக, தேசிய நெடுஞ்சாலை பழைய எண் 209 (புதிய எண் 948ல்) 306வது கி.மீட்டரில் துவங்கி 92 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்க நிலம் தேவைப்படுகிறது. இதில் குறிப்பிட்டுள்ள நிலங்களை நில எடுப்பு செய்ய ஆட்சேபனை இருந்தால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து, 21 நாட்களுக்குள், கோவை, ரெட் பீல்ட்ஸ், சவரிமுத்து வீதியில் உள்ள சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலரிடம் (நில எடுப்பு) எழுத்து மூலமாக தெரிவிக்கலாம். நேரடியாகவோ அல்லது வக்கீல் மூலமாகவோ தங்கள் ஆட்சேபனைக்கு ஆதரவான ஆவணங்களை அளிக்கலாம். அதிகாரம் பெற்ற அலுவலர் விசாரித்த பின்னர் ஆட்சேபனைகளை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ செய்யலாம். அதிகாரம் பெற்ற அலுவலர் பிறப்பிக்கும் உத்தரவே இறுதியானது.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறுகையில், 'பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த திட்டத்தால் பறிபோகும். அத்திக்கடவு திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, குளம், குட்டைகளுக்கு தண்ணீர் நிரப்பிய பிறகு விவசாய நிலங்களை பறிக்கின்றனர். அரசு ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலையை அகலப்படுத்தலாம் அல்லது மேம்பாலம் அமைக்கலாம். விவசாய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது. இந்த ஆட்சேபனைகளை விவசாயிகள் சார்பில், மாவட்ட வருவாய் அலுவலகத்தில் சமர்ப்பிக்க உள்ளோம்' என்றனர்.
05-Feb-2025