அரசு மகளிர் கல்லுாரிக்கு புதிய கட்டடம்
கோவை; உயர் கல்வி பயிலும் ஏழை, எளிய மாணவியரின் நலன் கருதி, புலியகுளத்தில் செயல்பட்டுவந்த அரசுப் பள்ளி கட்டடத்தில், 2020ம் ஆண்டு முதல் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.இதில், தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் என, ஐந்து இளங்கலை படிப்புகளில், 640 மாணவியர் பயின்று வருகின்றனர். மாணவியர் வசதிக்காக, 2023ம் ஆண்டு தரைதளம், முதல் தளம், இரண்டாம் தளம் என மூன்று தளங்களில் வகுப்பறைகள், ஆய்வகம், நுாலகம் என, 42 அறைகள் கொண்ட கட்டடம் கட்டும் பணி துவங்கியது.இப்பணிகள், ரூ.12.81 கோடி செலவில் கடந்தாண்டு முடிக்கப்பட்டன. இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக, புதிய கட்டடத்தை நேற்று திறந்துவைத்தார். உள்விளையாட்டு அரங்கம்!
கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில் ரூ.8 கோடி மதிப்பீட்டிலான உள்விளையாட்டு அரங்கத்தையும் முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.இதில், பேட்மின்டன், ஜிம், டேபிள் டென்னிஸ், கேரம், செஸ் உள்ளிட்ட போட்டிகளுக்கு, பயிற்சி பெறமுடியும்.
ஐந்து பாடப்பிரிவு துவக்க கோரிக்கை
கல்லுாரி முதல்வர் வீரமணி கூறுகையில்,''இப்புதிய கட்டடத்தில் வரும், 17ம் தேதி முதல் வகுப்பு துவங்கவுள்ளது. தற்போது, பயிற்றுவிக்கப்பட்டும் இளங்கலை ஐந்து பாடப்பிரிவுகளில், முதுகலை பாடப்பிரிவுகளும் துவங்குவதற்கு, அரசிடம் கருத்துரு அனுப்பியுள்ளோம். அதேபோல், கூடுதலாக ஐந்து பாடப்பிரிவுகளும் கோரியுள்ளோம். இதனால், ஏழை மாணவியர் பெரிதும் பயன்பெறுவர்,'' என்றார்.