உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீரகேரளத்தில் குடிநீரில் கலக்கும் சாக்கடை தண்ணீர் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை

வீரகேரளத்தில் குடிநீரில் கலக்கும் சாக்கடை தண்ணீர் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை

குவியும் குப்பை

வெள்ளலுார், ஒன்றாவது வார்டு, அரசுப் பணியாளர் நகர் செல்லும் வழியில், திறந்தவெளியில் அதிகளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. காற்றில் பறக்கும் குப்பையால் வாகனஓட்டிகள் அவதிப்படுகின்றனர். குப்பையை அகற்றி, மீண்டும் குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை வேண்டும்.- மாதவி, வெள்ளலுார்.

சாலையை கடக்க முடியவில்லை

விளாங்குறிச்சி ரோடு, வி.ஐ.பி., நகரில், காலை, மாலை வேளையில், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சாலையை கடக்க மிகுந்த நேரமும், சிரமமும் ஏற்படுகிறது. தடுப்புகள் மற்றும் வேகத்தடைகள் அமைத்து, சாலையை பாதுகாப்பாக கடக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.- சரவணன், வி.ஐ.பி., நகர்.

பேருந்து நிறுத்தம் வேண்டும்

பேரூர் மெயின் ரோடு, செல்வபுரம் பகுதியில், ஆர்.எம்.சி.எச்., மருத்துவமனை அருகே பேருந்து நிறுத்தம் அமைக்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆணை வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரை நிறுத்தம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கையில்லை.- ஜெயபால், செல்வபுரம்.

குடிநீரில் கலக்கும் சாக்கடை

வீரகேரளம், பள்ளி வீதியில், குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. தண்ணீரை பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் அசுத்தமாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.- சசிகலா, வீரகேரளம்.

திடீரென முளைத்த பேனர்

துடியலுார் - வெள்ளக்கிணறு ரோட்டில், மிகப்பெரிய விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில், மிகப்பெரிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. திடீரென வைக்கப்பட்டுள்ள இந்த பேனரை அகற்ற நடவடிக்கை வேண்டும்.- ராஜா, துடியலுார்.

தண்ணீரின்றி தவிப்பு

வீரபாண்டி, காமராஜர் ரோடு, பிருந்தாவன் கார்டன் பகுதியில், குடிநீர் சீராக விநியோகிக்கப்படுவதில்லை. 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் விநியோகிக்காததால், காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை உள்ளது. கேன் தண்ணீர் வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.- பெருமாள், வீரபாண்டி.

பள்ளங்களால் தொடரும் விபத்து

ரேஸ்கோர்ஸ், அப்பாசாமி காலேஜ் ரோடு, 83வது வார்டு, சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. பள்ளங்களாக இருக்கும் சாலையில், இருசக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கையில்லை.- பாலா, ரேஸ்கோர்ஸ்.

நாய் தொல்லை

மேட்டுப்பாளையம் ரோடு, 15வது வார்டு, அரசு ஐ.டி.ஐ., பின்புறம், தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. வீதியில் பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றுகின்றன. சாலையில் நடந்து செல்வோர், பைக்கில் செல்வோரை இந்தநாய்கள் துரத்தி அச்சுறுத்துகின்றன.- வித்யா, கவுண்டம்பாளையம்.

பாதி ரோடு, மீதி மண்

கணபதி, சி.எம்.எஸ்., பள்ளி எதிரில் கே.ஆர்.ஜி., நகர் முதல் வீதியில், தார் சாலையே தெரியாத அளவிற்கு மண் பரவிக்கிடக்கிறது. பாதி சாலை வரையும் மண் இருப்பதால், மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. நடந்து செல்லவும், வாகனங்களை இயக்கவும் முடியவில்லை.- மகிழினி, கணபதி.

பழைய வாகனங்களால் இடையூறு

காந்திபுரம், ஆம்னி பேருந்து நிலையம் எதிரில், சி.கே., காலனியின் நுழைவு வாயில் இருபுறமும் பழுதடைந்த இருசக்கர வாகனங்கள் நிறுதப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள இந்த வாகனங்களால், குறுகலாகி போன சாலையில், மற்ற வாகனங்கள் செல்ல இடைஞ்சலாக உள்ளது.- சியாமளா, காந்திபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ