மருந்துக்கு கவர் இல்லை; நோயாளிகளுக்கு சிரமம்
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் மருந்துகளுக்கு கவர் வழங்கப்படாததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில், தினமும் நூற்றுக்கணக்கானோர், சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். சிலர் மருத்துவ ஆலோசனைகள் கேட்டறிந்து செல்கின்றனர்.இதில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு, முறையாக கவர் வழங்கப்படாமல், கைகளில் நான்கு முதல் ஐந்து மாத்திரைகள் நோயின் தீவிரத்தை பொறுத்து வழங்குகின்றனர்.இதில், உணவுக்கு முன், பின் என மருந்துகள் வழங்கப்படுகிறது. சிலர், முறையாக கேட்டறிந்து செல்கின்றனர். சிலருக்கு எந்த மருந்தை முதலில் உட்கொள்வது என்பது தெரியாமல், மருந்தை மாற்றி சாப்பிடுவதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.குறிப்பாக, வயதானவர்களே அரசு மருத்துவமனைக்கு வந்து செல்வதால் மருந்தை மாற்றி உட்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. எனவே, தனியார் மருத்துவமனையில் மருந்துகளை தனித்தனியாக அடையாளப்படுத்தி கவரில் வழங்கப்படுவது போல், அரசு மருத்துவமனையிலும் வழங்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.