தமிழக அரசின் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பும், ஆதரவு என கலவையாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.தமிழக அரசின் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரை நிகழ்த்தினார். இதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், பொள்ளாச்சி நகராட்சி சார்பில், பழைய பஸ் ஸ்டாண்டில் பட்ஜெட் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. நகராட்சி தலைவர் சியாமளா, துணை தலைவர் கவுதமன், கவுன்சிலர்கள் மற்றும் பலர் பார்வையிட்டனர்.பட்ஜெட் குறித்த கருத்து வருமாறு:வெங்கடேஷ், தலைவர், பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை:
தமிழக பட்ஜெட் எல்லாருக்கும், எல்லாம் என்ற முறையில் அமைந்துள்ளது. கோவை சூலுார், பல்லடத்தில், 100 ஏக்கரில் செமி கன்டெக்டர் பூங்கா அமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நம்ம பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.ஆழியாறில், 1,800 மெகாவாட் புனல் மின்நிலையம் அமைக்கும் அறிவிப்பு வரவேற்கப்படுகிறது. இரண்டு லட்சம் மாணவர்கள் பயன்பெற 'லேப்டாப்' வழங்கப்படும். இரண்டாயிரம் சுய தொழில் புரிவோருக்கு மின் வாகனம் வாங்க, 20ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குவது வரவேற்கதக்கது. இவை உள்ளிட்ட பல திட்டங்கள் வரவேற்கும் வகையில் உள்ளன.ஆனந்தகுமார், இணை செயலாளர், பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை:
தமிழக பட்ஜெட்டை வரவேற்கும் வகையில் அமைந்துள்ளது. வளர்ச்சியை நோக்கிய திட்டங்கள் உள்ளடக்கிய பட்ஜெட்டாக உள்ளது. கோவை, பொள்ளாச்சியில் இயற்கையுடன் கூடிய சுற்றுலா மேம்படுத்தும் திட்டம் வரையறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மகளிருக்கு, 20 சதவீத மானியத்துடன், 10 லட்சம் ரூபாய் வரை தொழில் முனைவோர் கடன் வழங்கப்படும். தொழில் பூங்காக்கள் அமைப்பு, நொய்யல் அருங்காட்சியகம் போன்ற பல்வேறு திட்டங்கள் வரவேற்கும் வகையில் உள்ளது.கவுதமன், தலைவர், தேசிய தென்னை நார் கூட்டமைப்பு:
மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டம், பொருளாதார மேம்பாடு, தொலைநோக்கு பார்வை இல்லாத பட்ஜெட்டாக உள்ளது. பொள்ளாச்சி மாவட்டமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்த்தும் இந்த முறையும் ஏமாற்றமாக உள்ளது.சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள், மின்சார கட்டண உயர்வால், 10,000 யூனிட்கள் மூடப்பட்டுள்ளன. தொழிலை மேம்படுத்த ஏதாவது அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது; எதுவும் இல்லை. பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாததால் ஏமாற்றமாக உள்ளது.சுனில், பா.ஜ., மண்டல் பொதுச்செயலாளர், வால்பாறை:
தமிழக பட்ஜெட்டில் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எந்த திட்டமும் கொண்டுவரப்படவில்லை. கோவில் திருப்பணிக்கு, 125 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதும், சுற்றுலாத்துறைக்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதும் வரவேற்கத்தக்கது. சட்டசபை தேர்தலை குறி வைத்து, கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மக்களுக்கு பயன்படாத பட்ஜெட்.அருண் பிரசாத், தனியார் ஊழியர், பொள்ளாச்சி:
பட்ஜெட்டில், அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்த நிதி ஒதுக்கியது வரவேற்கக்கூடியது. ஆனால், தமிழகத்தில் அரசு பள்ளி கட்டமைப்பை சரி செய்ய இந்த நிதி போதுமானதாக இருக்குமா என தெரியவில்லை. மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மாநில அரசு வரி குறைப்பு இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. கோவையில், அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சி மையம் அமைக்க நிதி ஒதுக்கியது வரவேற்கத்தக்கது.ஆர்.அருண் கார்த்திக், தலைவர், உடுமலை தொழில் வர்த்தக சபை:
பட்ஜெட்டில் கிராமப்புறச்சாலைகள் மேம்பாட்டுக்காக, ரூ.2,200 கோடி ஒதுக்கி இருப்பது, விவசாயம் சார்ந்த தொழில்களின் வளர்ச்சிக்கு உதவும். மேலும், மகளிர் தொழில்துறையில் பங்களிக்கும் இடத்தில், செயல் திட்டம் வகுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில், தொழில் வளாகம் அமைக்கவும், நவீனப்படுத்தும் திட்டங்களுக்கு மானியம் வழங்க உள்ளதும் வரவேற்கத்தக்கதாகும். கல்வி, மருத்துவம், தொழில் துறை என அனைத்து துறைகளிலும், கவனம் செலுத்தப்பட்ட பட்ஜெட்டாக உள்ளது.ஆர்.கந்தசாமி, கோவை மாவட்ட பட்டையக் கணக்காளர்கள் சங்க முன்னாள் தலைவர், உடுமலை:
சென்னை பெருநகரத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, துணை நகரம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதும், போரூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது. பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழில் துறை என அனைத்து துறைகள் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மேலும், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் மகளிருக்கு பல்வேறு திட்டங்கள் வாயிலாக நிதி ஒதுக்கியுள்ளது, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றும்.வி.கே.சிவக்குமார், நிதி ஆலோசகர், உடுமலை:
நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கல்விக்கு முன்னுரிமை அளித்து, பெண்கள் நலன் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய விமான நிலையம் மற்றும் செயற்கைக்கோள் நகரம், நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பெண்கள் நலன் மற்றும் மாணவர் நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டங்கள், வீட்டுவசதி மற்றும் தொழில்துறை விரிவாக்கத்திற்கு முன்னுரிமை , உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப முதலீடுகள் மூலம் பிராந்தியத்தின் பொருளாதாரத்தை மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. -- நிருபர் குழு -