இனி அலைச்சல் இல்லை; நகரில் அமையுது பேரூராட்சி அலுவலகம்
அன்னுார்;அன்னுார் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 28 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். வரி செலுத்துவோர் 9,800 பேர் உள்ளனர். 5,600 குடிநீர் இணைப்புகள் உள்ளன. குமாரபாளையத்தில் தனியார் 'லே- அவுட்' டில் இடமும் கட்டடமும் இலவசமாக புரமோட்டர்கள் வழங்கியதால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அன்னுார் கடைவீதியில் இருந்த பேரூராட்சி அலுவலகம் குமாரபாளையத்திற்கு மாற்றப்பட்டது.இதனால் செல்லனுார், கவுண்டம்பாளையம், அல்லிகுளம் மற்றும் அன்னுார் நகர மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். வரி செலுத்துதல், அங்கீகாரம் பெறுதல், புதிய குடிநீர் இணைப்புக்கு, விண்ணப்பித்தல் ஆகியவற்றுக்கு நீண்ட தொலைவு செல்ல வேண்டி இருந்தது. இந்நிலையில் அன்னுார் பேரூராட்சி அலுவலகம் கட்ட, மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது. நகர்ப்புற அமைச்சர் நேருவிடம், பேரூராட்சி சார்பில் நேரடியாக மனு அளித்தனர்.இதையடுத்து அரசு ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கியது. தரை தளம் மற்றும் முதல் தளம் என 4,200 சதுரடியில் கட்டப்பட உள்ளது. டெண்டர் விடப்பட்டு, பணி உத்தரவு வழங்கப்பட்டது. நேற்று கட்டுமான பணியை நீலகிரி எம்.பி., ராஜா துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இத்துடன் ஒன்பது பேட்டரி வாகனங்கள், ஒரு டிப்பர் லாரி இயக்கி வைக்கப்பட்டது. இதனால் இனி அலைச்சல் இருக்காது என்பதால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.