110 குடிநீர் மாதிரிகளில் 39 தரம் குறைவு; உணவு பாதுகாப்புத்துறை தகவல்
கோவை; கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், கேன் குடிநீர் தயாரிப்பு யூனிட், வினியோகஸ்தர்களுக்கான டீலர்களுக்கான ஆய்வுக்கூட்டம், நேற்று மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதா தலைமை வகித்து, விதிமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.தொடர்ந்து அவர் கூறியதாவது: குடிநீர் மக்களுக்கு பிரதானமான ஒன்று. அதை பாதுகாப்பாகவும், தரமானதாகவும் கொண்டு சேர்க்கவேண்டும். குடிநீர், டி.டி.எஸ்., அளவு ,75 மி.கிராம் முதல் 500 மி. கிராம் வரை இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். மூடப்பட்ட வாகனங்களில் மட்டுமே தண்ணீர் எடுத்துச்செல்ல வேண்டும். அவ்வாகனங்களை வேறு பயன்பாட்டுக்கு உபயோகிக்க கூடாது. ஆர்.ஓ., யூனிட் உட்புறம் பணிபுரிபவர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி வழங்ககூடாது. தவிர, வளர்ப்பு பிராணிகளுக்கு அங்கு இடமில்லை.கடந்த ஜன., மாதம் மாவட்டம் முழுவதும் பல்வேறு கடைகளில், 110 தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன; அதில், 39 தரம் குறைவாக இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, 39 நிறுவனங்களில் ஆய்வு செய்யவுள்ளோம். அனைத்து விதிமுறைகளும் ஆய்வு கூட்டத்தில் விளக்கப்பட்டது. அதை முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். இக்கூட்டத்தில் பங்கேற்ற, டிஸ்டிரிபியூட்டர்கள், டீலர்கள் மெக்னீசியம், கால்சியம் கலப்பதாலும், 75 மி.கிராம் டீ.டி.எஸ்., அளவு காரணமாகவும் தண்ணீரின் சுவை மாறுவதால், பொதுமக்கள் வாங்க மறுப்பதாகவும், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தினர்.
'சுவையில் மாற்றம் இருந்தால் நல்லது'
உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறுகையில், ''தண்ணீரில் டி.டி.எஸ்., அளவு குறைந்தபட்சம் 75 மி.கிராம் முதல் இருக்கும் பொழுது, தண்ணீரின் சுவையில் சற்று மாற்றம் இருக்கும். நிலத்தடி நீர் சுத்திகரிக்கும் போது தண்ணீரில் உள்ள தாதுக்கள் வெளியேறி விடுகின்றன.இதனால், மெக்னீசியம், கால்சியம் சத்துக்களை கலக்கவேண்டும். இதனால், சுவை மாற்றம் இருக்கும். இது உடலுக்கு நல்லது. பொதுமக்கள், இதை தவிர்க்கவேண்டிய அவசியம் இல்லை,'' என்றார்.