நெட்ஒர்க் பிரச்னையால் மக்கள் பாதிப்பு
வால்பாறை;வால்பாறையில், பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் அதிக அளவில் உள்ளனர். வாடிக்கையாளர்கள் வசிதிக்காக, வால்பாறை நகர், சோலையாறுடேம், சின்கோனா, முடீஸ், அட்டகட்டி, கவர்க்கல் உள்ளிட்ட, இடங்களில் டவர் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மழை காலங்களில் பல மணி நேரம் 'நெட்ஒர்க்' துண்டிக்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நேற்று முன்தினம் காலை முதல் மதியம் வரை பி.எஸ்.என்.எல்., சேவை துண்டிக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் யாரையும் தொடர்புகொள்ள முடியாமலும், ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுக்க முடியாமலும் தவித்தனர்.வாடிக்கையாளர்கள் கூறுகையில், 'வால்பாறை மலைப்பகுதியில் பி.எஸ்.என்.எல்., சேவையை தான் மக்கள் நம்பியுள்ளனர். ஆனால், மின் தடை ஏற்பட்டாலோ, மழை பெய்தாலோ பல மணி நேரம் சேவை துண்டிக்கப்படுகிறது. அடிக்கடி சேவை பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, அதிகாரிகள் நிரந்தரமாக தீர்வு காண வேண்டும்,' என்றனர்.