போத்தனுாரில் பாதையை திறக்கக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
போத்தனூர்: கோவை, போத்தனூரில் அடைக்கப்பட்ட பாதையை திறக்கக் கோரி, மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை மாநகராட்சியின், 85 மற்றும் 95வது வார்டுகளுக்குட்பட்டது கதிரவன் மற்றும் உதயம் நகர்கள். 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதனையொட்டி, வெள்ளலூர் பேரூராட்சியின் ஒன்றாவது வார்டு பகுதியில், எலைட் அவென்யூ நகர் எனும் புதிய பகுதி, சில ஆண்டுகளுக்கு முன் உருவானது. இப்பகுதிக்கு செல்ல, அம்மன் நகர் (85வது வார்டு) பிரதான பாதையை மக்கள் உபயோகப்படுத்தி வந்தனர். இவ்வழியின் இறுதியில் வாய்க்காலை ஒட்டி ரிசர்வ் சைட் உள்ளது. இதனை மீட்க அப்பகுதியினர் போராட்டம் நடத்தினர். வழக்கு போடப்பட்டு கடந்தாண்டு பாதை அடைக்கப்பட்டது. முன்னதாக, கதிரவன் நகருக்கு செல்லும் வழியிலிருந்த பாலம் உடைந்ததால், புதியதாக கட்டும் பணி நடந்தது. அப்போது கதிரவன் நகர், உதயம் நகர்களை சேர்ந்த மக்கள் அம்மன் நகர் பாதையை உபயோகப்படுத்தினர்.தற்போது புதியதாக பாலம் கட்டப்பட்டதால், அவ்வழியை மக்கள் பயன்படுத்த துவங்கி விட்டனர்.இந்நிலையில் இப்பகுதியினர் அடைக்கப்பட்ட அம்மன் நகர் பாதையை திறந்துவிடக்கோரி, முதல்வரின் தனிப்பிரிவு, மாநகராட்சி ஆகியவற்றுக்கு மனு அனுப்பினர். நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுக்கு நேற்று காலை, 50க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்ட பாதை அருகே கூடி, பாதையை திறக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி, கலைந்து சென்றனர்.
'மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்'
கதிரவன் நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் மன்சூர் அகமது கூறுகையில், கதிரவன், உதயம், எலைட் அவென்யூ நகர்களில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பேச்சியம்மன் கோவில் வழிதான் பிரதானமானது. மாற்றுப் பாதையான அம்மன் நகர் பாதையை திறந்து விடவேண்டும். தவறினால், அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை பொது தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். தனிப்பட்ட சிலரின் ஈகோவால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.