பிளஸ் 1 ஆங்கில பாடத் தேர்வு ரொம்ப ஈஸி மாணவ, மாணவியர் உற்சாகம்
பிளஸ் 1 மாணவர்களுக்கான ஆங்கிலப் பாட பொதுத் தேர்வு நேற்று நடந்த நிலையில், வினாக்கள் அனைத்தும் மிகவும் எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, 38 மையங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், நேற்று, பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஆங்கிலப் பாடத் தேர்வு நடந்தது.தேர்வு குறித்து, கந்தசாமி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கருத்துவருமாறு:யோகரிஷி: ஆங்கிலம் தேர்வு மிக எளிமையாக இருந்தது. பாட உள்வினாக்களில் இருந்து கேள்விகள் இடம்பெற்றிருந்தாலும், மிக எளிமையாகவே இருந்தது. 15 நிமிடத்திற்கு முன்னதாகவே விடைகளை எழுதி முடித்து விட்டேன். அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுதியுள்ளதால், முழு மதிப்பெண் கிடைக்கும்.தரணிதரன்: அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்கள், அகவினாக்களாக இடம்பெற்றிருந்தாலும், தீவிர பயிற்சி காரணமாக, எளிதில் விடை எழுத முடிந்தது. இலக்கண வினாக்கள் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அதற்கான வினாக்களும் மிக எளிமையாக இருந்தது. அதிக மதிப்பெண்கள் கிடைக்கப்பெறும் என, எதிர்பார்க்கிறேன்.மதன்பிரசாத்: ஒரு மதிப்பெண், இரு மதிப்பெண் வினாக்கள் எதிர்பார்த்தபடி மிக சுலபமாக இருந்தது. இதேபோல, பிற வினாக்களும் அமைந்திருந்ததால், அனைத்து வினாக்களுக்கும் உரிய நேரத்திற்குள் எளிதாக விடை எழுத முடிந்தது. நுாறு சதவீத அளவில் மதிப்பெண் கிடைக்கும். உடுமலை
உடுமலை ஆர்.கே.ஆர்., குருவித்யா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து:நேத்ராஸ்ரீ : ஆங்கில தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. பள்ளியில் தொடர்ந்து பயிற்சி அளித்தனர். குறிப்பாக இலக்கண, இலக்கிய பகுதிகள் குறித்து அடிக்கடி தேர்வுகள் வைத்து பயிற்சி வழங்கியதால், தேர்வில் எளிதில் விடைகளை எழுத முடிந்தது.ஸ்ரீதவுமிகா: ஆங்கிலத்தேர்வு இவ்வளவு சுலபமாக வருமென எதிர்பார்க்கவில்லை. இதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு மதிப்பெண், மூன்று மதிப்பெண் பகுதிகளும் எதிர்பார்த்ததை போல நேரடியான வினாக்களாக கேட்கப்பட்டன. இலக்கண பகுதி வினாக்களும் முந்தைய தேர்வு வினாத்தாள்களில் இருந்து அதிகம் வந்திருந்தது. அதிக மதிப்பெண் கிடைக்கும்.அகல்யா: ஆங்கில பாடத்துக்கு பள்ளியில் அடிக்கடி தேர்வு வைக்கப்பட்டதால், விரைவில் விடைகளை எழுதிவிட்டேன். மேலும், வினாக்களும் குழப்பும் வகையில் இல்லை. பெரிய வினா பகுதிகளும் பயிற்சி செய்த வினாவாக இருந்ததால், உற்சாகமாக விடை எழுத முடிந்தது. தேர்வு எழுதிய பின், விடைத்தாளை திருப்பி பார்ப்பதற்கும் நேரம் கிடைத்தது.இவ்வாறு, கூறினர்.