உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்கணும்! முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்கணும்! முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும், என, தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கண்ணப்பன், முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளார்.தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம் ஆகிய ஆறு தாலுகாக்களை உள்ளடக்கி மாவட்டம் உருவாக வேண்டும்.நிலப்பரப்பு அடிப்படையில், கேரளா மாநில எல்லையும், கிழக்கில் அமராவதி நதி, தெற்கில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், வடக்கில் கிணத்துக்கடவு பகுதியும் கொண்டது.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் இருந்த திருப்பூர் தனியாக பிரிக்கப்பட்டு மாவட்டமாக மாறியுள்ளது.பொள்ளாச்சி லோக்சபா தொகுதி, பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்துார், உடுமலை, மடத்துக்குளம் என ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.பி.ஏ.பி., திட்டத்தில், பரம்பிக்குளம், சோலையாறு, ஆழியாறு, திருமூர்த்தி, அமராவதி உள்ளிட்ட அணைகள் பாசனம் பெறுகின்ற நிலப்பரப்பு, பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் அடங்கியுள்ளது.பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளை உள்ளடக்கி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது. இரு பகுதிகளிலும் தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. மேலும், வனப்பகுதிகளும் இணைந்துள்ளன.இதுபோன்ற பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு, பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும். பட்ஜெட் கூட்ட தொடர் துவங்க உள்ள நிலையில், இரு கோரிக்கைகளையும் நிறைவேற்றிட வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !