18ல் விசைத்தறி சங்க பொதுக்குழு கூட்டம்
சோமனுார்; கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில், வரும், 18ம் தேதி விசைத்தறி பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. கடந்த, 2022ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த கூலியில் இருந்து குறைக்கப்பட்ட கூலியை முழுமையாக வழங்க வேண்டும், இனிமேல் கூலியை குறைக்காமல் வழங்கும் வகையில் சட்ட பாதுகாப்புடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி தரவும், புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திட, ஜவுளி உற்பத்தியாளர்களை, மாவட்ட நிர்வாகம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த, 15 நாட்களுக்கு மேலாக, விசைத்தறி கூடங்களில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தில், வரும், 19ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது என, முடிவு செய்து அறிவித்தனர். இதற்கிடையில், வரும், 18ம்தேதி பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளதாக சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து, சோமனூர் சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் பூபதி ஆகியோர் கூறியதாவது:கூலி உயர்வு கேட்டு போராட்டங்களை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. 10 முறை பேச்சுவார்த்தை நடந்தும், ஜவுளி உற்பத்தியாளர்கள் புறக்கணித்தனர். மாவட்ட நிர்வாகம் ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, கூலி உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே, 25 சதவீத விசைத்தறிகள் உடைத்து விற்கப்பட்டு விட்டது.கூலி உயர்வு கிடைக்காமலும், மின் கட்டண உயர்வை சாமாளிக்க முடியாமலும் திணறி வரும் மற்ற விசைத்தறியாளர்களும் தறிகளை விற்கும் முடிவுக்கு சென்றுள்ளனர்.கூலி பிரச்னை குறித்து விவாதிக்க, வரும், 18ம் தேதி சோமனுார் செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.