| ADDED : ஏப் 11, 2024 12:50 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி கோர்ட் வளாகம் அருகே, குவிந்து கிடக்கும் உணவு மற்றும் குப்பை கழிவுகளால் பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.பொள்ளாச்சி பஸ்ஸ்டாண்டில் இருந்து, பல்லடம், உடுமலை செல்லும் பஸ்கள் வசதிக்காக நியூஸ்கீம் ரோடு மேம்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில், கோர்ட், சப் - கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளது.சப் - கலெக்டர் அலுவலகத்தையொட்டி உள்ள ரோட்டோரத்தை, ஆதரவற்றோர் தங்களது இருப்பிடமாக மாற்றியுள்ளனர். பலரும் தானமாக வழங்கும் உணவை உட்கொள்ளும் ஆதரவற்றோர், கோர்ட் வளாகம் அருகே உள்ள காலி இடத்தில் தட்டு, சாப்பாடு பொட்டலம் போன்றவற்றை அப்படியே வீசிச் செல்கின்றனர்.மேலும், அரசியல் கட்சிகளின் கூட்டத்துக்கு வருவோரும், சாப்பிடும் உணவுகளை அப்படியே வீசிச் செல்வதால் அவ்விடம் குப்பை தொட்டி போன்று மாறிக்கிடக்கிறது. இதனால், சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'உணவு கழிவுகள், குப்பை கழிவுகள் மூட்டையாக, கோர்ட் வளாகம் அருகே தேங்கி கிடக்கிறது. இதனால், சுகாதாரம் பாதிப்பதுடன், துர்நாற்றம் வீசுகிறது.நகரின் முக்கிய பகுதியில் இவ்வாறு தேங்கும் கழிவுகள், பொள்ளாச்சிக்கு வருவோரை முகம் சுளிக்க வைக்கிறது. இக்கழிவுகளை முறையாக அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.