உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்வே சங்க அங்கீகார தேர்தல்; கோவையில் 90 சதவீத ஓட்டுப்பதிவு

ரயில்வே சங்க அங்கீகார தேர்தல்; கோவையில் 90 சதவீத ஓட்டுப்பதிவு

கோவை; ரயில்வே சங்க அங்கீகார தேர்தலில், கோவையில் 89.9 சதவீத ஓட்டுகள் பதிவாகின.ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் வெற்றி பெறும் சங்கம் மட்டுமே, ரயில்வே உடனான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும். 2013ல் நடந்த தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.,) அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கமாக தேர்வு செய்யப்பட்டது.கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக, தள்ளிப்போன தேர்தல் கடந்த மூன்று நாட்களாக நடந்தது. ரயில்வேயின் 17 மண்டலங்களைச் சேர்ந்த, 12.20 லட்சம் ஊழியர்களின் ஆதரவைப் பெற, தக் ஷிண ரயில்வே ஊழியர்கள் சங்கம், தக் ஷிண ரயில்வே கார்மிக் சங்கம், ரயில் மஸ்தூர் யூனியன், தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கம், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் ஆகிய தொழிற்சங்கங்கள் தேர்தலில் களமிறங்கின.கடந்த 4,5,6ம் தேதிகளில் மூன்று நாட்கள் தேர்தல் நடந்தது. முதல் இரண்டு நாட்கள் பெரும்பாலான சங்க உறுப்பினர்கள் வாக்களித்தனர். தெற்கு ரயில்வேயில், 6 ரயில்வே கோட்டங்களில் 140 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட கோவை மாவட்டத்தில், போத்தனூரில் 2 ஓட்டுச்சாவடிகளும், கோவை ரயில் நிலையத்தில் ஒரு ஓட்டுச்சாவடியும் அமைக்கப்பட்டிருந்தன. மூன்று நாட்களும் தேர்தல் அமைதியாக நடந்தது.போத்தனூரைப் பொறுத்தவரை, ரயில்வே கல்யாண மண்டபம் மற்றும் எஸ்.என்.டி., பணிமனை என இரு இடங்களில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. பணிமனை ஓட்டுச்சாவடியில் மொத்தமுள்ள 800 ஓட்டுகளில், 776 ஓட்டுகள் பதிவாகின. இதில், 7 ஓட்டுகள் தபால் ஓட்டு.ரயில்வே திருமண மண்டபத்தில், 574 ஓட்டுகளில், 510 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. போத்தனூர், மேட்டுப்பாளையம், பெ.நா., பாளையம், துடியலூர், இருகூர், சிங்காநல்லூர், வடகோவை, பீளமேடு, சோமனூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், போத்தனூர் ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்போட்டனர்.கோவை ரயில்வே ஸ்டேஷனில், '1 ஏ' பிளாட்பார்ம் அருகே வி.ஐ.பி.,களுக்கான காத்திருப்பு அறையில் ஓட்டுப்பதிவு நடந்தது. 844 ஓட்டுகளில், 714 ஓட்டுகள் பதிவாகின.கோவை, போத்தனூர் ஆகிய மூன்று ஓட்டுச்சாவடிகளில் மொத்தமுள்ள 2218 ஓட்டுகளில், 1,993 ஓட்டுகள் பதிவாகின. இது, 89.85 சதவீதம் ஆகும்.

ஓட்டு எண்ணிக்கை

அந்தந்தக் கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, ஓட்டுச்சாவடிகளில் அனைத்து ஓட்டுப்பெட்டிகளும், கோட்டத் தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்படும். கோவை, போத்தனூர் ஓட்டுப்பெட்டிகள் சேலம் கோட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு எண்ணப்படும். நாடு முழுதும் வரும் 12ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி