ரூ.ஒன்றரை கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
மேட்டுப்பாளையம் : தனியார் ஆக்கிரமிப்பு செய்திருந்த, ரூ.ஒன்றரை கோடி மதிப்புள்ள வருவாய் துறைக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம், போலீஸ் பாதுகாப்புடன் மீட்கப்பட்டது. மேட்டுப்பாளையம் நகராட்சி அருகே, தேக்கம்பட்டி ஊராட்சி மூன்றாவது வார்டில் சாமண்ணா நகர் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த நகருக்கு செல்வதற்கு போதிய இடவசதி இல்லாததால், சிறிய அளவில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாது. ஆனால் இந்த சாலையின் அருகே, வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தை, ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து, அதை விவசாய நிலமாக பயன்படுத்தி வந்தார். இதனால், உடல் நலம் பாதித்தவர்களையும், கர்ப்பிணி பெண்களையும் மருத்துவமனைக்கு அழைத்த செல்ல, ஆம்புலன்ஸ் இந்த குடியிருப்பு பகுதிக்கு வர முடியாத நிலை இருந்தது. இதுகுறித்து இக்குடியிருப்பு மக்கள், தேக்கம்பட்டி ஊராட்சியில், 2023ம் ஆண்டு நடந்த, கிராம சபை கூட்டத்தில், எங்கள் குடியிருப்பு பகுதி அருகே உள்ள, அரசு நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்த இடத்தை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து மேட்டுப்பாளையம் வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்து, போலீஸ் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு ரூ. ஒன்றரை கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம் தாசில்தார் வாசுதேவன் தலைமையில், மண்டல துணை தாசில்தார் சுரேஷ், தலைமை சர்வேயர் கண்ணன் மற்றும் வருவாய் துறையினர், ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலத்தை, அளந்து எல்லை அளவீடு செய்தனர். இதை அடுத்து நிலத்தில் போட்டிருந்த முள்கம்பி வேலியை, பொக்லைன் வாயிலாக அகற்றி, சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்தை மீட்டனர்.