ஆகாயத்தாமரை அகற்றம்; பளீச்சென மாறிய ஆழியாறு! கழிவுநீர் கலக்காமல் இருக்க சுத்திகரிப்பு நிலையம் தேவை
ஆனைமலை : ஆனைமலையில், ஆழியாறு ஆற்றில் வளர்ந்திருந்த ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்ட நிலையில், புது வெள்ளம் வந்ததால் ஆறு துாய்மையாக மாறியுள்ளது.ஆழியாறு ஆற்று நீரை பயன்படுத்தி, ஆனைமலை ஒன்றியம், பொள்ளாச்சி நகராட்சி, வழியோர கிராமங்களை உள்ளடக்கிய குடிநீர் திட்டங்கள், பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு உள்ளிட்ட 64 கிராமங்கள், பெரிய நெகமம், கிணத்துக்கடவு பேரூராட்சி பயன்பெறும் வகையில், 13 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இத்திட்டத்தின் வாயிலாக, பொள்ளாச்சி நகரம், தெற்கு, வடக்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு, குறிச்சி, குனியமுத்துார் உள்ளிட்ட பகுதி மக்கள், ஆழியாறு நீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.மக்களுக்கு மட்டுமின்றி, கால்நடைகளுக்கு நீராதாரமாக உள்ளது ஆழியாறு ஆறு.குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஆற்றில், பல்வேறு காரணங்களால் மாசுபடுகிறது. இதனால், ஆறு முழுவதும் ஆகாயத்தாமரை செடி வளர்ந்துள்ளது. இதை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவருகின்றனர்.இந்நிலையில், அமைச்சர் உத்தரவின்படி,ஆகாயத்தாமரை செடியை அகற்ற, ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம் பேரூராட்சிகள் சார்பில் திட்டமிட்டனர்.நீர்வளத்துறை அதிகாரிகள் ஆகாயத்தாமரை அகற்ற நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து கடந்த, மே மாதம் பணிகள் துவங்கப்பட்டன. தொடர்ந்து, சேறு அகற்றப்பட்டு, ஆகாயத்தாமரை செடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இந்நிலையில் தொடர் மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உபரிநீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அதில், ஆற்றில் மீதம் இருந்த ஆகாயத்தாமரைகளும் அடித்துச் செல்லப்பட்டன. தற்போது, ஆறு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதால் சுற்றுலா பயணியர், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் ஆற்றை கண்டு ரசிக்கின்றனர்.ஆற்றுப்பகுதி சுகாதாரமாக இருக்க, கழிவுநீர் கலப்பு உள்ளிட்டவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி கூறுகையில், ''ஆனைமலையில் ஆழியாறு ஆற்றில், ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து, பம்ப் ஹவுஸ் அருகே இருந்த ஆகாயத்தாமரை செடியும் அகற்றப்படுகிறது.அமைச்சர் முத்துசாமி தலைமையில் கூட்டம் நடத்தி சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.