ரிப்போர்ட்டர் லீக்ஸ்
யூனியன் ஆபீஸ்ல சேர் இல்லீங்களா?
கிணத்துக்கடவு யூனியன் ஆபீஸ் வளாகத்தில், ஊராட்சித்தலைவர்கள், பொதுமக்கள் நிறைய பேர் நின்றிருந்தனர். மரியாதை தெரியாத ஆபீசர்களா இருக்காங்க... இவங்கெல்லாம் இந்த ஊருக்கு ஒத்து வரமாட்டாங்க, என, அதிருப்தியில் பேசிக்கொண்டிருந்தனர். என்ன பிரச்னை என, விசாரித்தேன்.பொதுவான மக்கள் பிரச்னைக்கு தான் மனு கொடுக்க, யூனியன் ஆபீஸ்க்கு வந்திருக்கோம். ஆபீஸ்க்கு வர்ற மக்கள சேர்ல உட்கார வச்சு பேசணும்னு முதல்வர் ஸ்டாலினே சொல்லியிருக்காரு. ஆனா, இந்த ஆபீஸ்ல இருக்கறவங்க மக்களுக்கு மரியாதையும் கொடுக்கறதில்ல, முதல்வர் உத்தரவையும் கண்டுக்கறதில்ல.யூனியன் ஆபீஸ்ல, பி.டி.ஓ., ரூம்ல மட்டும் தான், மக்கள் உக்கார சேர் போட்டிருக்காங்க. மத்த ஆபீசர்கள் டேபிள் முன்னாடி, சேர் போடவே இல்லை.மக்கள் யாராவது போய் மனு கொடுத்தாலோ அல்லது ஆவணங்கள் குறித்து சந்தேகம் கேட்க போனாலோ, நிற்க வச்சே பேசறாங்க. மக்கள் உட்கார ஒரு சேர் கூட இல்லை. வயசான பெரியவங்க வந்தா ரொம்ப கஷ்டப்படுறாங்க.எதிரியா இருந்தாலும் உட்கார வச்சு பேசறது நம்ம ஊரு வழக்கம். ஆனா, யூனியன் ஆபீஸ்ல இருக்கறவங்களுக்கு இந்த இங்கிதம் கூட தெரியல, என்றனர். ஆசிரியர் பணியா; மார்க்கெட்டிங் பணியா?
உடுமலை பள்ளிகளில் கலைப்போட்டிகள் நடக்கிறது. அதில் 'எமிஸ்' பணிகளில் தொடரும் துயரம் குறித்தும், ஆசிரியர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசியதில் இருந்து...'எமிஸ்' பிரச்னை, ஒரு முடிவுக்கு வர்ற மாதிரியே தெரியல. எமிஸ் பணிகளை பார்க்கறதுக்கு தொழில்நுட்ப பணியாளர்கள் போட்டாச்சு. இனிமே ஆசிரியர்கள் அவர்களுக்கான வேலையை மட்டும் பார்க்கலாம் என அரசு அறிவிச்சது.ஆனா, உடுமலை சுற்றுவட்டாரத்துல, பெரும்பான்மையான அரசு மேல்நிலைப்பள்ளிகள்ல அப்படி யாரும் போடலேனு தான் சொல்றாங்க. துவக்க, நடுநிலைப்பள்ளிகள் மீது அரசு கருணை காட்டுது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு கருணை காட்டலயே.வகுப்பு நேரம் மட்டுமில்லாம, 24 மணி நேர ஆம்புலன்ஸ் மாறி, அலர்ட்டா இருக்க சொல்றாங்க. அந்த பதிவு, இந்த பதிவுனு எமிஸ் பிரச்னை ஓயமாட்டீங்குது. இதுல 'டைம் டார்க்கெட்' வேற கொடுக்கறாங்க. வரவர ஆசிரியர் பணி, மார்க்கெட்டிங் பணி மாதிரி மாறி போயிருச்சு. இப்படியே போனா ஆசிரியர்கள் எல்லாரும் வி.ஆர்.எஸ்.,ல் போயிருவாங்க, என, பேசிக்கொண்டிருந்தனர். இப்படி இருந்தா கட்சி எப்படி வளரும்!
வால்பாறையில், தி.மு.க., கோவை தெற்கு மாவட்டம் சார்பில் நகரச்செயலாளர் சுதாகர் தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மாவட்ட செயலாளர் முருகேசன், 75 வயதான அவைத்தலைவர் செல்லமுத்துவுக்கு மோதிரம் பரிசளித்தார்.ஆனாலும், இப்படி இருந்தா கட்சி எப்படி வளரும்னு, உடன்பிறப்புகள் பேசிக்கிட்டு இருந்தாங்க. அவர்கள் பேச்சை கவனித்தேன்.'லோக்சபா தேர்தலில் வால்பாறை தொகுதியில அதிக ஓட்டு வாங்கி கொடுத்த மாதிரி, சட்டசபை தேர்தல்லையும் வாங்கணும். கட்சியில ரெண்டு பதவியில இருக்கறவங்க, ஒரு பதவிய விட்டுக்கொடுங்க. அரசின் சாதனைகளைமக்களிடம் சொல்லி, தி.மு.க.,வ வெற்றியடைய செய்யணும்னு,' மாவட்டம் பேசினாரு.கூட்டம் முடிஞ்சதும், சுடச்சுட பிரியாணி போட்டாங்க. கட்சி நிர்வாகிகளுக்கு என்ன பிரச்னை இருக்கு, வால்பாறைல வளர்ச்சி பணி நடக்குதா, கட்சிய வளர்க்க எண்ண பண்ணனும்... அப்படினு எந்த ஆலோசனையும் செய்யல.ஓட்டு கேட்க போனா, மக்கள் பிரச்னைய சொல்லுறாங்க. அந்த பிரச்னைய தீர்த்து வைக்க கட்சி நிர்வாகிகள் யாருமே பேசறதில்ல. ஓட்டு வாங்கி ஜெயிக்கணும்னு மட்டும் பேசறாங்க. இப்படி இருந்தா கட்சி எப்படி வளரும்னு தெரியல, என, புலம்பி தீர்த்தனர். யூனியன் ஆபீசர் 'நோ ரெஸ்பான்ஸ்'
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துல, அரசோட எந்த திட்டங்களும் வெளிய தெரியக்கூடாதுனு அதிகாரிகள் செயல்படுறாங்கனு நண்பர் திடீரென புகார் கூறினாரு.ஏன் இப்படி சொன்னீங்கனு கேட்டப்போ, 'வடக்கு ஒன்றியத்துல மத்திய, மாநில அரசு திட்டம் எல்லாம் செயல்படுத்துறாங்க... இந்த திட்டங்கள் குறித்து அதிகாரிகள் எந்த விளக்கமும் கொடுக்கறதில்ல.ஊராட்சிகள எல்லாம் கவனிக்க கூடிய ஒன்றிய அதிகாரி ஒருத்தருக்கு, 'டவுட்'னு போன் பண்ணினா, போன எடுக்க மாட்டாரு. எத்தனை முறை போன் பண்ணினாலும் 'நோ ரெஸ்பான்ஸ்' தான்.வாட்ஸ்ஆப்பில் தகவல் கேட்டாலும், அதற்கு 'நோ ரெஸ்பான்ஸ்' தான். அவர எப்படி தொடர்பு கொண்டு பேசுறதுனு எல்லாரும் கேட்கறாங்க. கிராம சபை கூட்டங்கள் நடந்தால் கூட, அது பற்றிய விபரங்களை தெரிவிக்க மாட்டாரு.அவங்களுக்கு, சி.யு.ஜி., மொபைல்போன் கொடுத்ததே எளிதாக தொடர்பு கொள்ளத்தான். ஆனா அவரு, போனையும் எடுத்து பேசறதில்ல, ரிப்ளையும் செய்யறதில்ல. அரசு அதிகாரி இப்படி இருந்தால், அரசு திட்டங்கள் எப்படி போய் சேரும்னு, சொன்னாரு.நண்பர் சொல்லறத கன்பார்ம் பண்ண, அந்த அதிகாரிக்கு போன் பண்ணி பார்த்தா, நோ ரெஸ்பான்ஸ் தான். பாடாய்படுத்தும் பாதாள சாக்கடை
பொள்ளாச்சி நகராட்சி ஆபீஸ்ல, நண்பரை சந்தித்தேன். 'பாதாளச்சாக்கடை திட்டம் செயல்பாட்டுக்கு வந்தா, ரோட்டுல கழிவுநீரையே பார்க்க முடியாது. வடிகால்ல, மழை நீர் மட்டுமே செல்லும். கொசுத்தொல்லை இருக்காதுனு, ஏகப்பட்ட உறுதிமொழி கொடுத்தாங்க.இப்ப, தெருவெல்லாம் கழிவுநீரா இருக்கு. இதையெல்லாம் செய்தியா போட மாட்டீங்களா,' என, உரிமையோடு கேட்டார். எங்க, என்ன பிரச்னைனு விசாரித்தேன்.பொள்ளாச்சியில இப்ப, குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்கு, பாதாளச்சாக்கடை திட்ட இணைப்பு முழுமை பெறாமல் உள்ளது. அவ்வப்போது, பாதாளச்சாக்கடை இணைப்பு பெற வேண்டும் இல்லைனா, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்னு, நகராட்சி எச்சரிக்குது.ஒரு வார்டுல, குறிப்பிட்ட வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு இணைப்பு வழங்காம இழுத்தடிச்சுட்டு இருக்காங்க. அஞ்சாவது வார்டுல, பெரும்பாலான வீட்டுக்கு சாக்கடை இணைப்பு கொடுக்கல. இதுபத்தி, கேட்டா நகராட்சியல யாருமே வாய் திறக்க மாட்டீங்கறாங்க.மழை பெஞ்சா, ரோடு முழுக்க கழிவுநீரும் கலந்து வெள்ளமா ஓடுது. பாதாள சாக்கடை மேன்ேஹால்ல இருந்து, கழிவுநீர் பொங்கி வெளியே வருது. இதுக்கெல்லாம், நகராட்சியில என்ன பண்ணப்போறாங்க, என, ஆதங்கத்தோடு கேள்வி ஒன்றையும் எழுப்பினார். இதுக்கெல்லாம், நகராட்சி நிர்வாகம் செயல்பாடால் தான் பதில் சொல்லணும். உழவர் சந்தையில வியாபாரிக ஆதிக்கம்!
உடுமலை உழவர் சந்தைக்கு சென்றிருந்த போது, அவ்வழியே விவசாயி ஒருவர் புலம்பியபடி சென்றார். உழவர் சந்தையில என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.விவசாயிகளுக்காக உருவாக்கின உழவர் சந்தையில, விவசாய நிலமே இல்லாதவங்க, போலி ஆவணம் வாயிலா, விவசாயிங்கற போர்வையில இருக்காங்க. வியாபாரிகளும் உள்ளே புகுந்து ஆதிக்கம் செலுத்தறாங்க.ஒரு விவசாயி, அதிகபட்சமா, 250 கிலோ, மட்டுமே காய்கறி விற்க முடியும். இதை விவசாயியே நேரடியா விற்கணும். அஞ்சு வகை காய்கறிக்கு மேல விற்க கூடாதுனு ஏகப்பட்ட ரூல்ஸ் இருக்குங்க.ஆனா, பயிரே செய்யாமல், உடுமலை நகராட்சி மொத்த சந்தையில மொத்தமா காய்கறி வாங்கிட்டு வந்து, இங்க விற்கறாங்க. நகராட்சி சந்தையில கமிஷன் கடை நடத்தறவங்க, ஊட்டி காய்கறி மட்டுமில்லாம, எல்லா காய்கறி அயிட்டங்களையும், 4 டன் வரை, கூலிக்கு ஆட்கள வைத்து விற்குறாங்க.புதுசா வந்த ஆபீசரிடம் புகார் தெரிவித்தாலும், உயர் அதிகாரிகள் வரை புகார் மனு கொடுத்தாலும், ஆளும்கட்சி தலையீடு, அதிகாரிகளுக்கு விற்பனை தொகையில் பங்கு இருக்கறதால, யாருமே கண்டுக்கறதில்ல, என்றார்.
ரூட்டுல இல்லீங்க செக்கிங்; பஸ் இல்லாம மக்கள் வாக்கிங்!
சுங்காரமுடக்கு கிராமத்து பாலம் அருகே, இரு தொழிலாளர்கள் இரவு நேரத்தில், டூவீலரில் பயணிக்க லிப்ட் கேட்டபடி நின்றிருந்தனர். அவர்களிடம் பேச்சு கொடுத்தோம். பெதப்பம்பட்டி சுத்தி இருக்கற கிராமத்துல இருந்து, தாராபுரம் வரைக்கும், நெறய பேர் கட்டட வேலை, மில்லு வேலை, பனியன் கம்பெனிக்கு போவாங்க.அப்புறம் திருப்பூரு; பல்லடம் வேலைக்கு போறவங்களும், குடிமங்கலம் நால்ரோட்டுக்கு வந்து, தாராபுரத்துல இருந்து பொள் ளாச்சி போற பஸ் ஏறி வூட்டுக்கு போகணுங்க.இப்படி வேலைக்கு போறவங்க எல்லாரும், இப்ப வெகு சிரமப்படுறாங்க. தாராபுரத்துல இருந்து, ராத்திரி 7:15 மணிக்கு கிளம்பி பொள்ளாச்சிக்கு போற ப்ரைவேட் பஸ் வர்றது இல்லைங்க; அதே மாதிரி பொள்ளாச்சியில இருந்து கிழக்க வர்ற ப்ரைவேட் பஸ்சையும் நிறுத்திட்டாங்க.இதனால, குடிமங்கலம் நால்ரோட்டுல ஒரு மணி நேரத்துக்கும் மேலா காத்திருக்கோம். அதுக்கப்புறம் வர்ற மப்சல் பஸ்சுல அதிக கூட்டமாகி, நெறைய பேரு ஏற முடியறது இல்லை.கூட்டத்தை பார்த்தா சில ஸ்டாப்ல நிறுத்த முடியாதுனு சொல்றாங்க. தனியார் பஸ்க நைட் நேரத்துல மட்டும் ஓட்டறது இல்லைன்னு அதிகாரிங்க விசாரிச்சு நடவடிக்கை எடுக்கணும்; பெட்டிஷன் மேல பெட்டிஷன் போட்டும், ஒன்னும் நடக்கல. எப்பவாச்சும் அதிகாரிங்க செக்கிங் பண்ணிணா இந்த பிரச்னை தெரியும், என, கூறி அங்கிருந்து நடையை கட்டினர்.