உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இ-பாஸ் சோதனைச்சாவடியில் அணிவகுக்கும் வாகனங்கள் கூடுதல் அலுவலர்களை நியமிக்க கோரிக்கை

இ-பாஸ் சோதனைச்சாவடியில் அணிவகுக்கும் வாகனங்கள் கூடுதல் அலுவலர்களை நியமிக்க கோரிக்கை

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் கல்லாறு இ--பாஸ் சோதனை சாவடி அருகே அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சோதனை சாவடியில் கூடுதல் அலுவலர்களை நியமிக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு இ--பாஸ் முறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து கடந்த 7ம் தேதி முதல் இ- பாஸ் முறை அமலுக்கு வந்தது. வரும் ஜூன் 30-ம் தேதி வரை இம்முறையானது அமலில் இருக்கும். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திற்குள் செல்லும் 13 வழித்தடங்களிலும் இ--பாஸ் சோதனை நடந்து வருகிறது. கோவையில் இருந்து நீலகிரி செல்லக்கூடிய சாலையில் மேட்டுப்பாளையம் கல்லாறு தூரிப்பாலம் அருகே இ--பாஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.இதில் நீலகிரி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய வாகனங்கள் இ-பாஸ் பெற்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இ- பாஸ் பெறாத வாகனங்களை நிறுத்தி, இ--பாஸ் பெறுவதற்கான வழிமுறைகளை சொல்லி, வருவாய் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி, இ-பாஸ் எடுத்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.இதன் காரணமாக வாகனங்கள் நீண்ட துாரத்துக்கு அணிவகுத்து நிற்கின்றன. இதனால் கல்லார் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வார விடுமுறை என்பதால் கடந்த இரண்டு நாட்களாக நீலகிரிக்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுமார் அரை மணி நேரம் வரை சோதனை சாவடியில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இச்சோதனை சாவடியில் 20க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள், போலீசார் உள்ளிட்டோர் உதவி கலெக்டர் அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு கூடுதலாக அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து நீலகிரி செல்லும் சுற்றுலா பயணிகள் கூறுகையில், இ- பாஸ் சோதனை சாவடியில் இ- பாஸ் ஸ்கேன் செய்து அனுப்புகின்றனர். இதற்காக ஒரு வாகனத்திற்கு 2 முதல் 3 நிமிடங்கள் வரை ஆகிறது.இதனால் பின்னால் வரும் வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. விடுமுறை நாட்களில் கூடுதல் அலுவலர்களை நியமித்து, வாகனங்கள் விரைந்து செல்வதற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.இதுகுறித்து அங்கு பணிபுரியும் அதிகாரி ஒருவர் கூறுகையில், நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ- பாஸ் தேவையில்லை. இதனால் அவ்வாகனங்கள், அரசு பஸ்கள் போன்றவை செல்ல சோதனை சாவடியில் தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. பிற வாகனங்களை சோதனை செய்ய 20க்கும் மேற்பட்ட வருவாய் அலுவலர்கள் உள்ளனர். வாகனங்கள் தேங்கி நிற்காதவாறு பணிகள் மேற்கொண்டு வருகின்றோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ