உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உப்பாறு ஓடையை மீட்டு கொடுங்க! அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

உப்பாறு ஓடையை மீட்டு கொடுங்க! அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

உடுமலை : பிரதான கால்வாயில் இருந்து, உப்பாறு அணைக்கு தண்ணீர் செல்லும் ஓடையை சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.தாராபுரம் தாலுகா, கெத்தல்ரேவ் பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களின், வெள்ள வடிகாலாக உள்ள ஒடைகளை, நீர்பிடிப்பு பகுதியாகக்கொண்டு உப்பாறு அணை கட்டப்பட்டது.கடந்த 1965ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை வாயிலாக நேரடியாக, 6 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பு பாசன வசதி பெற்று வருகிறது.உடுமலை, குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில் உருவாகும், சிறிய மழை நீர் ஓடைகள், ஒருங்கிணைந்து, உப்பாறு அணைக்கு முக்கிய நீர்வரத்து அளிக்கின்றன.மேலும், வறட்சி காலங்களில், தாராபுரம் பகுதி விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், திருமூர்த்தி அணை நீர் இருப்பை பொறுத்து, உப்பாறு அணைக்கு பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுகிறது.அரசூர் ஷட்டர் பகுதியிலிருந்து, 20 கி.மீ., க்கும் அதிகமான தொலைவு அமைந்துள்ள ஓடை வழியாகவே இந்த தண்ணீர் அணைக்கு செல்ல வேண்டும்.இவ்வாறு, தண்ணீர் செல்லும் ஓடை சீமை கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, நீர் வழித்தடம் முற்றிலுமாக மறைந்து வருகிறது.இது குறித்து, அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு அனுப்பியுள்ள மனு: மழைக்காலங்களிலும், முறையான வழித்தடம் இல்லாததால், உப்பாறு ஓடையின் பல இடங்களில், மழை நீர் வீணாகச்செல்கிறது.இதனால், பி.ஏ.பி., பிரதான கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் உப்பாறு அணையை முறையாக எட்டுவதில்லை. இப்பிரச்னைக்கு தீர்வாக, ஓடையிலுள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்; கரையோர ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி, வழியோரத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.இது குறித்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், பொதுப்பணித்துறை சார்பில், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ