சன்மார்க்க சங்கம் மூன்றாண்டுகளாக அன்னதானம்
அன்னூர்:சன்மார்க்க சங்கத்தினர் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, அன்னதானம் வழங்கி வருகின்றனர். அன்னூர் அருகே ஓரைக்கால் பாளையத்தில், திருவடி ஞானம் சன்மார்க்க சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில், பக்தர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, ஒவ்வொரு வாரமும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை, அன்னூர் அரசு மருத்துவமனை முன்பும், ஞாயிறன்று சேவூர் அரசு மருத்துவமனை முன்பும், 250 முதல் 300 பேருக்கு, தக்காளி சாதம் அல்லது எலுமிச்சை சாதம் வழங்கி வருகின்றனர்.சன்மார்க்க சங்கத்தினர் கூறுகையில், 'எங்கள் சங்கம் சார்பில், மூன்று ஆண்டுகளாக, அரசு மருத்துவமனை முன் வாரத்தில் இரண்டு நாட்கள் அன்னூரிலும், ஒரு நாள் சேவூரிலும் அன்னதானம் வழங்கி வருகிறோம். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று கூறுவதால், இந்த சேவையை செய்து வருகிறோம்' என்றனர்.