சீதா ராமர், ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
மேட்டுப்பாளையம்;காரமடை அடுத்து மருதூர் ஊராட்சியில் உள்ள செல்லப்பனூரில், புதிதாக சீதா சமேத ராமச்சந்திர மூர்த்தி மற்றும் ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டது. வேலைபாடுகளுடன் கல்காரப் பணிகளும், கோபுரங்களில் சிலைகளும் கட்டப்பட்டுள்ளன. கல்கார கட்டட கோவில் சுவற்றில், கிருஷ்ணரின் மச்சம் அவதாரம், கூர்மம், வராக, நரசிம்ம, வாமண, பரசுராம், ராமர், பலராமர், கிருஷ்ணன், கல்கி ஆகிய 10 அவதாரங்களின் சுவாமி சிலைகள் இடம்பெற்றுள்ளன. கோவில் முன்பாக 11 அடி உயரமுள்ள அனுமன் சிலை வைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் விழா, கடந்த, 4ம் தேதி புண்யாஹவாசம், மகா சுதர்சன ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு திருவாராதனம், வேத திவ்ய பிரபந்தம் சாற்றுமுறை சேவிக்கப்பட்டது. தீர்த்த கலசங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. முதலில் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கும், பின்பு சீதா ராமச்சந்திர மூர்த்தி சுவாமி சிலைகள் மீது தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. நாங்குநேரி திருக்குறுங்குடி கிருஷ்ண ஐயங்கார் கும்பாபிஷேகம் செய்து வைத்தார்.