உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சொற்பொழிவாளர் சர்ச்சை பேச்சு எதிரொலி அரசு பள்ளிகளுக்கு சி.இ.ஓ., அதிரடி உத்தரவு

சொற்பொழிவாளர் சர்ச்சை பேச்சு எதிரொலி அரசு பள்ளிகளுக்கு சி.இ.ஓ., அதிரடி உத்தரவு

கோவை;சென்னை அரசு பள்ளியில், சொற்பொழிவாளரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உத்தரவிட்டுள்ளார்.சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சொற்பொழிவாளர் மகா விஷ்ணு என்பவர் மாணவ, மாணவியரிடையே சொற்பொழிவாற்றினார். அப்போது, அவரது பேச்சை கேட்டு மாணவியர் பலர், கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.அந்த சமயம், மகா விஷ்ணுவின் பேச்சுக்கும், செயலுக்கும் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் என்பவர், எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பள்ளியில் மறுபிறவி, பாவம், புண்ணியம் என்று எல்லாம் எதற்காக பேசுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதால், கோபமடைந்த மகா விஷ்ணு, 'நீங்கள் சொல்லித் தராததைத்தான் நான் சொல்லித் தருகிறேன். அதற்கு நீங்கள் எனக்கு நன்றி கூற வேண்டும். வீணாக, வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். முற்பிறவியில் செய்த பாவச்செயல்களின் பலனாகவே, இந்த ஜென்மம் கிடைத்துள்ளது' என்று கூறியுள்ளார்.மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில், பேசிய மகா விஷ்ணு மீது, மாற்றுத்திறனாளி நலச்சங்கத்தினர் போலீசில், புகார் அளித்துள்ளனர். சொற்பொழிவுக்கு அனுமதி அளித்த தலைமையாசிரியை, இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'என் துறையின் கீழ் இருக்கும் ஆசிரியர்களை தவறாக பேசிய மகா விஷ்ணுவை சும்மா விடமாட்டேன்; இவர் மீது ஆசிரியர் புகார் அளித்தால் உறுதுணையாக இருப்போம்' என, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தினால், பங்கேற்பாளர்கள் உள்ளிட்ட விபரங்களை சமர்ப்பித்து, முன் அனுமதி பெற வேண்டும் என, அனைத்து பள்ளிகளுக்கும் கல்வி அதிகாரிகள் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(சி.இ.ஓ.,) பாலமுரளி கூறுகையில், ''பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சொற்பொழிவாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்டோரின் விபரங்களை சமர்ப்பித்து, என்னிடம் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ