| ADDED : ஆக 18, 2024 10:40 PM
கோவை:கிராம ஊராட்சிகளுக்கு, இணையதள வசதி வழங்கும் திட்டத்துக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது ,கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, கலெக்டர் எச்சரித்துள்ளார். இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது: கோவையிலுள்ள 228 கிராம ஊராட்சிகளிலும், இணையதள வசதி வழங்கும் பாரத்நெட் திட்டம், 'டேன்பினெட்' மூலம் முழு வீச்சில் நடக்கிறது.ஆப்டிக்கல் பைபர் கேபிள்கள், 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமும், 15 சதவீதம் தரை வழியாகவும் இணைக்கப்படுகிறது. இது வரை கோவையில், 191 ஊராட்சிகளில் இணைய வசதி வழங்க தயார் நிலையில் உள்ளது.இத்திட்டத்துக்கான யு.பி.எஸ்.,ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அங்குள்ள அரசு கட்டடத்தில் நிறுவப்படுகிறது. இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறை, ஊராட்சி மன்றத் தலைவரால் துாய்மையாக பராமரிக்கப்படுகிறது. இச்சூழலில் சிலர், ஆப்டிக்கல் பைபர் கேபிள்களை தங்களுக்கு சொந்தமான நிலங்களின் வழியாக கொண்டு செல்லக்கூடாது என தடை செய்கின்றனர். இது முழுமையான அரசின் திட்டம். கண்ணாடி இழை மின்சாரத்தை கடத்தாது. ஆகவே கண்ணாடி இழை ஏற்கனவே நிறுவியுள்ள மின் கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல, மக்கள் தடை செய்யக்கூடாது.இதனால் பயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆப்டிக்கல் பைபர் கேபிளில் எந்த உலோகப்பொருட்களும் இல்லை; அதனால் இதை திருடி பணமாக மாற்றலாம் என்ற தவறான புரிதல் வேண்டாம்.இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும், இணையதள வசதிகளை பெற முடியும்.மேற்குறிப்பிட்ட உபகரணங்களையோ, ஆப்டிகல் பைபர் கேபிள்களையோ சேதப்படுத்துபவர்கள், திருடுபவர்கள், கண்ணாடி இழை கேபிள்களை துண்டாக்குபவர்கள், மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல தடை செய்பவர்கள் மீது, கடும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.