கோவை;கோவை - அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டப்படுகிறது. இரு வழித்தடத்திலும் தலா இரு இடங்களில் ஏறு தளங்கள் மற்றும் இறங்கு தளங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கு, ரோட்டோரத்தில் உள்ள மரங்கள் இடையூறாக இருக்கின்றன.அம்மரங்களை வேரோடு பெயர்த்தெடுத்து, மறுநடவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, தேவைப்படும் இடங்களில் மறு நடவு செய்யப்படுகிறது.இந்திய தொழில் வர்த்தக சபை அலுவலகத்துக்கு அருகே இருக்கும், 60 வயதான அரச மரம், 25 வயதான சேவல்கொண்டை பூ மரம், வேரோடு பெயர்த்தெடுக்கப்பட்டு, வ.உ.சி., மைதானத்தில் நடப்படுகிறது.இதில், 40 அடி உயரம், 12 அடி சுற்றளவு கொண்ட சேவல்கொண்டை பூ மரம் நேற்றிரவு, 'கிரீன் கேர்' அமைப்பு தன்னார்வலர்கள், நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை மற்றும் மின்வாரியத்தினர் உதவியுடன், வேரோடு பெயர்த்தெடுத்து, வ.உ.சி., மைதானத்தில் மறுநடவு செய்யப்பட்டது.இதே போல், அரச மரத்தை பெயர்த்தெடுத்தபோது, மரத்துக்கு கீழ், 30 அடி ஆழ கிணறு இருந்தது. அதைப்பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்தனர்.அதைத்தொடர்ந்து, அம்மரத்தை கொண்டு செல்ல முடியவில்லை. இன்று மறுநடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.