2.24 லட்சம் வேம்பு நடவு செய்ய இலக்கு
மேட்டுப்பாளையம்;கோவை மாவட்டத்தில் 13 எக்டர் பரப்பளவில் 2.24 லட்சம் வேம்பு நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய எண்ணெய் வித்து மரப்பயிர்கள் திட்டத்தில் வேம்பு நடவு செய்ய மானியம் வழங்கப்படுகிறது.இதுகுறித்து, கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடாசலம் தெரிவித்ததாவது:-சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும், மண் அரிப்பு ஏற்படாமல் இருப்பதற்கும் வேம்பு உதவுகிறது. விவசாயிகளின் தரிசாக உள்ள நிலங்களில் எண்ணெய்வித்து மரப்பயிர்களான வேம்பு மற்றும் புங்கன் நடவு செய்ய மானிய உதவி, தேசிய உணவு எண்ணெய் பாதுகாப்புத் திட்டத்தின் வாயிலாக வழங்கப்படுகிறது. 2024--25ம் ஆண்டிற்கு, கோவை மாவட்டத்திற்கு, இத்திட்டத்தின் கீழ், 13 எக்டர் பரப்பளவில் 2.24 லட்சம் வேம்பு நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு எக்டருக்கு 400 வேம்பு மரக்கன்றுகள் என்ற அளவில், புதிதாக நடவு செய்ய ரூ.17,000 மானியம் வழங்கப்படுகிறது. மேலும் நடவு செய்த முதல் மூன்று ஆண்டுகளுக்கு, ஊடு பயிரிடுதல் மற்றும் பராமரிப்பு மானியமாக ஒரு எக்டருக்கு ரூ.3,000 கூடுதல் மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக பயன் பெற விரும்பும் விவசாயிகள் உழவர் செயிலி மூலம் பதிவு செய்யலாம், அல்லது அந்தத்த பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.--