உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகராட்சியில் விதிமீறல் கட்டடங்கள் மீது... நடவடிக்கை பாயும்! விதிமுறையை பின்பற்ற கமிஷனர் அறிவுரை

நகராட்சியில் விதிமீறல் கட்டடங்கள் மீது... நடவடிக்கை பாயும்! விதிமுறையை பின்பற்ற கமிஷனர் அறிவுரை

பொள்ளாச்சி:''பொள்ளாச்சி நகராட்சியில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு விதிமீறல்கள் இல்லாமல் கட்டடம் கட்ட வேண்டும்,'' என நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.பொள்ளாச்சி நகராட்சியில் வணிக நிறுவனங்கள் அதிகளவு உள்ளன. இங்குள்ள கடைகள், விதிமீறல்கள் உள்ளதாக கோர்ட் உத்தரவுப்படி சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில், நகராட்சியில் பதிவு பெற்ற பொறியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.நகராட்சி கமிஷனர் கணேசன் பேசியதாவது:தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 பிரிவு, 132, 133 மற்றும் நகர் ஊரமைப்பு சட்டம், 1971ன் கீழ், அனுமதி பெற்று கட்டடம் கட்ட வேண்டும்.கட்டடத்தின் அளவு, 10 ஆயிரம் சதுர அடி வரை, 14 மீட்டர் உயரம் (தரைதளம் மற்றும் இரண்டு தளம் அல்லது கீழ் தரைதளம் மற்றும் மூன்று தளம்) கொண்ட குடியிருப்பு கட்டடம்.மற்றும், 2,000 சதுர அடி வரை, ஏழு மீட்டர் உயரம் (தரைதளம் மற்றும் ஒரு தளம்) கொண்ட வணிக கட்டடம் கட்ட ஒற்றை சாளர முறையில், நகராட்சியில் பதிவு பெற்ற பொறியாளர்கள் வாயிலாக, உத்தேச கட்டட வரைபடம் மற்றும் இதர ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். அனுமதி பெற்றவாறு கட்டடம் கட்ட வேண்டும்.கட்டட வரைபடம், இதர ஆவணங்கள் சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு சரியாக இருப்பின், கட்டட வரைபடத்தின் அளவுக்கேற்ப அனுமதி தொகையினை மதிப்பீடு செய்ய வேண்டும்.அத்தொகையினை, 15 நாட்களுக்குள் செலுத்தி கட்டட அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

புதிய முறை

தமிழக அரசின் புதிய திட்டத்தின் படி, சுய சான்று முறையில் ஒற்றை சாளர இணைய முகப்பின் வழியாக வலைதளத்தில், 2,500 சதுரஅடி கொண்ட இடத்தில், 3,500 சதுரஅடியில் தரைதளம் அல்லது தரைதளத்துடன் கூடிய முதல் தளம் (ஏழு மீட்டர் உயரம்) குடியிருப்பு கட்டடம் கட்ட நகராட்சி அலுவலகத்தை அணுகாமலே விண்ணப்பிக்கலாம்.இதற்கு உரிய ஒருங்கிணைந்த கட்டண தொகையினை செலுத்தி, இணைய முகப்பில் விண்ணப்பித்து அனுமதி பெற்றலாம்.

நகர் ஊரமைப்பு துறை

கட்டடத்தின் அளவு, 10 ஆயிரம் சதுரஅடி வரை, 14 மீட்டர் உயரம் (தரைதளம் மற்றும் இரண்டு தளம் அல்லது கீழ்தளம் மற்றும் மூன்று தளம்) கொண்ட குடியிருப்பு கட்டடம். மற்றும், 2,000 சதுரஅடி வரை, ஏழு மீட்டர் (தரைதளம் மற்றும் ஒரு தளம்) கொண்ட வணிகம், இதர உபயோக கட்டடத்துக்கு அல்லது மனைப்பிரிவு வரைபடத்துக்கு ஒற்றைச்சாளர இணைய முகப்பின் வழியாக, கோவை நகர் ஊரமைப்பு துறை துணை இயக்குனர் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.அத்துறை இசைவு பெற்று, கட்டட வரைபடம் அல்லது மனைப்பிரிவு வரைபடத்துக்கான அனுமதியினை நகராட்சியில் உரிய கட்டணம் செலுத்தி, வரைபட ஒப்புதல் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நிறைவு சான்று

14 மீட்டர் உயரம் கொண்ட எட்டு மாடி குடியிருப்பு அல்லது, 750 சதுரமீட்டர் கொண்ட குடியிருப்பு கட்டடம் மற்றும், 300 சதுர மீட்டர் கொண்ட வணிக கட்டடத்துக்கு மின் இணைப்பு பெற கட்டட நிறைவு சான்று தேவையில்லை.மேலும், இதர அளவு கொண்ட கட்டடத்துக்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதி, 2019ல் தெரிவித்துள்ளது போன்று பார்ம் -2 முதல் பார்ம் -- 10 வரை நிலைக்கேற்ப வலைத்தளம் வாயிலாக 'அப்டேட்' செய்து கட்டட நிறைவு சான்று பெறலாம்.

எச்சரிக்கை

நகராட்சியில் அனுமதி பெற்ற வரைபடத்தில், மாற்றம் இல்லாமல் கட்டடம் கட்டுவதை பதிவு பெற்ற பொறியாளர்கள் கண்காணித்து, உறுதிப்படுத்த வேண்டும்.தவறும் பட்சத்தில், பதிவு பெற்ற பொறியாளர்களின் உரிமம் ரத்து செய்வதுடன், நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.கட்டட அனுமதி பெறாமல் மற்றும் அனுமதிக்கு மாறாக கட்டப்படும் கட்டடத்துக்கு, தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், மற்றும் நகர் ஊரமைப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை மேற்கொண்டு பூட்டி 'சீல்' வைக்கப்படும்.அல்லது இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதிமீறல்களை தவிர்த்து, நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ