மேலும் செய்திகள்
நடைபாதை ஆக்கிரமிப்புகளை தடுக்க புது முயற்சி
03-Mar-2025
கோவை: 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 3.54 கோடி ரூபாய் செலவழித்து, கோவை பெரிய கடை வீதி மற்றும் ராஜ வீதியில் அமைக்கப்பட்ட நடைபாதையில், ஏகப்பட்ட இடங்களில் சிலாப் கற்கள் பெயர்ந்துள்ளன.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவை பெரிய கடை வீதிக்கு ரூ.1.85 கோடி, ராஜ வீதிக்கு ரூ.1.69 கோடி செலவழித்து நடைபாதை ஏற்படுத்தப்பட்டது.இதில், பெரிய கடை வீதியில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பிருந்து விக்டோரியா ஹால் வரை நடைபாதையில், சாலையோர வியாபாரிகள் அமர்ந்து, தரைக்கடை அமைத்திருக்கின்றனர். பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது.எதிர்திசையில் கடைக்காரர்கள், நடைபாதையை ஆக்கிரமித்து, கடை விளம்பர பலகைகளையும், பொருட்களையும் வைத்திருக்கின்றனர். பாதசாரிகள் செல்வதற்கு குறுகிய இடமே கிடைக்கிறது. பாதசாரிகள், வாகனங்களுக்கு இடையே, குறுக்கும் நெடுக்குமாக நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது.இப்பாதை பயன்பாட்டுக்கு வந்து ஓராண்டு முழுமையாகவில்லை. ஆங்காங்கே சிலாப் கற்கள் பெயர்ந்திருக்கின்றன. பூம்புகார் நிறுவனத்துக்கு முன்பிருந்து சிக்னல் வரை, 10க்கும் மேற்பட்ட இடங்களில், சிலாப் கற்கள் பெயர்ந்திருக்கின்றன. மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கு எதிரே உள்ள பேக்கரிக்கு முன்பும் கற்கள் பெயர்ந்துள்ளன.சிக்னலில் இருந்து ஒப்பணக்கார வீதிக்குச் செல்லும் வழித்தடத்தில், ரோட்டின் இருபுறமும் அமைக்கப்பட்ட நடைபாதையை கடைக்காரர்கள் ஆக்கிரமித்து, பொருட்களை பரப்பியுள்ளனர்.வரிசையாக தள்ளுவண்டி கடைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால், ரோட்டில் பொதுமக்கள் நடந்து செல்வதால், வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். இதேபோல், ராஜவீதியில் மைக்கேல் பள்ளி மற்றும் சர்ச்க்கு அருகேயும், சிலாப் கற்கள் பெயர்ந்திருக்கின்றன.இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''ஆய்வு செய்து, சீரமைக்க அறிவுறுத்துகிறேன். சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்,'' என்றார்.
03-Mar-2025