| ADDED : ஜூன் 25, 2024 12:10 AM
அன்னுார்;அன்னுாரில் ஐந்து மாதங்களாக செயல் அலுவலர் பணியிடம் காலியாக உள்ளதால் பணிகள் பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது. அன்னுார் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 5660 குடிநீர் இணைப்புகள் உள்ளன. 9300க்கும் மேற்பட்ட சொத்து வரி செலுத்துவோர் உள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் லைசென்ஸ் கட்டணம் வசூல் ஆகிறது. இது தவிர வார சந்தை ஏலம், வணிக வளாகம் என பல்வேறு வரியினங்களில் வருமானம் வருகிறது. தினமும் 10 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது.இங்கு பணிபுரிந்து வந்த செயல் அலுவலர் மோகனரங்கன் கடந்த பிப்ரவரி மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை வேறு செயல் அலுவலர் நியமிக்கப்படவில்லை. மோப்பிரிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் பெலிக்ஸ் கூடுதல் பொறுப்பில் அன்னுார் பேரூராட்சியில் பணிபுரிந்து வருகிறார்.ஏற்கனவே கலெக்டர் அலுவலக மீட்டிங் உள்ளிட்ட காரணங்களால் செயல் அலுவலர்கள் வாரத்துக்கு இரண்டு நாட்கள் வெளியே சென்று விடுகின்றனர். மீதி உள்ள மூன்று நாட்கள் தான் பேரூராட்சி அலுவலகத்தில் இருக்கின்றனர்.அதுவும் இரண்டு பேரூராட்சி என்பதால், முழுமையாக அன்னுார் பேரூராட்சியில் அவர் கவனம் செலுத்த முடிவதில்லை. அன்னுார் பேரூராட்சியில், குளத்து ஏரியில், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயில் சாலை அமைக்கும் பணி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி என பல கோடி ரூபாயில் பல பணிகள் உள்ளன. சந்தை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கடைகள் ஏலம் விடப்படவில்லை.செயல் அலுவலர் இல்லாததால் இப்பணிகளில் மந்த நிலை இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக அன்னுார் பேரூராட்சிக்கு செயல் அலுவலர் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.