உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சொல் வேறு; செயல் வேறு! மரக்கன்று நடுகிறது அரசு: வெட்டுகிறது மாநகராட்சி

சொல் வேறு; செயல் வேறு! மரக்கன்று நடுகிறது அரசு: வெட்டுகிறது மாநகராட்சி

கோவை: சமீபகாலமாக, கோவையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. நேற்றைய தினம் மாநகராட்சி அலுவலகத்தின் முகப்பு மற்றும் பெயர் பலகையை மறைப்பதாக கூறி, மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டதால், இயற்கை ஆர்வலர்கள் அதிருப்தியடைந்தனர்.தமிழகத்தில் அடுத்த, 10 ஆண்டுகளில் பசுமை பரப்பை, 33 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. கோவை மாவட்டத்தில் தன்னார்வலர்கள் மூலம் 'மியாவாக்கி' முறையில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. மாநகராட்சி மூலம் வெள்ளலுார் குப்பை கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அரசின் வளர்ச்சி பணிகளுக்கு வளர்ந்த மரங்கள் இடையூறாக இருந்தால், வேரோடு பெயர்த்தெடுக்கப்பட்டு, வேறொரு இடத்தில் மறுநடவு செய்யப்படுகின்றன.இருப்பினும், மரங்களின் அவசியத்தை உணராத சிலர், தங்களது சுய நலத்துக்காக மரங்களை வேரொடு வெட்டிச்சாய்க்கின்றனர். வீட்டுக்குள் கிளை வருகிறது; பூச்சித்தொல்லையாக இருக்கிறது; கடையின் முகப்பு மறைக்கிறது என்பன போன்ற காரணங்களை கூறி, வருவாய்த்துறையிடம் எவ்வித அனுமதியும் பெறாமல், மரங்களை வெட்டிச் சாய்க்கின்றனர். இதுபோன்ற சம்பவம், கோவையில் நேற்று இரு இடங்களில் நடந்தது. இயற்கை ஆர்வலர்கள் விரைந்து செயல்பட்டதால், கிளைகள் வெட்டப்பட்டதோடு, மரங்கள் தப்பின.மரங்களை பாதுகாக்க வேண்டிய, மரக்கன்றுகள் நட வேண்டிய, மாநகராட்சி நிர்வாகமே, தனது அலுவலகத்தின் முகப்பு மறைப்பதாக கூறி, மரக்கிளைகளை வெட்டிச் சாய்த்தது இயற்கை ஆர்வலர்களை அதிருப்தியடையச் செய்தது.டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தின் முகப்பு பகுதியில் உள்ள, 40 வயதான அசோக மரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட கிளைகளை, உதவி பொறியாளர் முத்துக்குமார் தலைமையிலான குழுவினர் வெட்டிச் சாய்த்தனர். இதுதொடர்பாக விசாரித்தபோது, 'மாநகராட்சி அலுவலகத்தின் முகப்பு மற்றும் பெயர் பலகை மறைக்கிறது; அதனால், கிளைகளை வெட்டுகிறோம்' என, அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேபோல், அருகாமையில் உள்ள மரங்களிலும் கிளைகள் வெட்டப்பட்டு உள்ளன. இத்தகவல் அறிந்ததும், 'கிரீன் கேர்' அமைப்பினர் சென்று, கிளைகள் வெட்டுவதை தடுத்து நிறுத்தினர்.இதேபோல், உக்கடம் பழைய மார்க்கெட்டில், கடை முகப்பு மறைப்பதாகக் கூறி, 30 வயது மதிக்கத்தக்க பூவரசு மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டன. அங்கேயும் விரைந்து சென்று, மரத்தை முழுமையாக வெட்டிச்சாய்ப்பதை தடுத்து நிறுத்தினர்.

'மாவட்ட பசுமை கமிட்டி உயிர்ப்புடன் செயல்படணும்'

'கிரீன் கேர்' அமைப்பு நிறுவனர் சையத் கூறுகையில், ''பசுமை பரப்பை அதிகரிக்க மரக்கன்றுகள் நடுவது சிறப்பு. அதே நேரம், நன்கு வளர்ந்த மரங்களை வெட்டாமல் காப்பதே அதை விட நல்லது. மனிதர்களை போலவே, அவையும் ஓர் உயிரினம் என்பதை உணர வேண்டும். மரங்கள் ஒவ்வொன்றும் ஆக்சிஜன் வங்கி. வளர்ச்சி பணிக்காக மரங்களை வெட்டலாம் என்கிற எண்ணத்தை மனதில் இருந்து வீழ்த்த வேண்டும். மாவட்ட அளவிலான பசுமை கமிட்டி உயிர்ப்புடன் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும். ஏனெனில், மாநகராட்சி நிர்வாகம் 'சக்தி மான்' என்கிற வாகனத்தை மரக்கிளைகளை வெட்டுவதற்காக பயன்படுத்துகிறது. மின் ஒயர்களில் உரசும் கிளைகளை மின்வாரியத்தினர் வெட்டுவர். ஆனால், மாநகராட்சி நிர்வாகமே முன்வந்து ஆங்காங்கே மரக்கிளைகளை வெட்டி, மரங்களை மொட்டையாக்குவது வேதனையாக இருக்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சாண்டில்யன்
நவ 11, 2024 18:23

தெரு விளக்குகள் பலவும் மரங்களின் கூந்தலுக்குள்ளேதான் நிருவப் படுகின்றன அல்லது ஒருவேளை விளக்கை மறைக்கவே மரம் வளர்ந்ததோ விளக்கு இருக்கும் வெளிச்சம்தான் வராது மரத்தின் தழைகள் மறைத்துவிடும்


Ravi
நவ 04, 2024 14:02

Yes in Coimbatore trees plants are cut extensively by corp for drainage, suez, gas connection randomly without thinking of environmental damage and not planting any trees inside cities


என்றும் இந்தியன்
நவ 03, 2024 18:37

திருட்டு திராவிட மாடல் சித்தாந்தமே இது தானே


pandit
நவ 03, 2024 16:28

இரண்டு வழியிலும் கமிஷன் வருமே. ஒரு கல் செடி இரண்டு மாங்காய் கமிஷன்


Mani . V
நவ 03, 2024 08:40

இந்த கேடுகெட்ட மாநகராட்சி அதிகாரிகளை....


புதிய வீடியோ