ஆன்லைனில் ரூ.5 லட்சம் பறிப்பு திருவள்ளூர் வாலிபர் கைது; கும்பலுக்கு வலை
பாலக்காடு;'ஆன்லைன்' வர்த்தகம் என்ற பெயரில், 5 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பல்லாவூர் பகுதியைச் சேர்ந்தவர் சஜீவ், 48. இவரிடம் இருந்து 'ஆன்லைன்' வர்த்தகம் வாயிலாக அதிக வருவாய் பெற்றுத் தருகிறோம் என்று கூறி, நம்ப வைத்த கும்பல், ஐந்து லட்சம் ரூபாய் பறித்தனர்.இது தொடர்பாக, சஜீவ் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், மாவட்ட எஸ்.பி., ஆனந்தின் அறிவுரையின்படி சித்தூர் டி.எஸ்.பி., கிருஷ்ணதாசின் தலைமையிலான சிறப்பு படை அமைத்து, விசாரணை நடந்தது. இதில், பணம் பறித்த 'ஆன்லைன்' மோசடி கும்பலில் இருந்த, தமிழகம், சென்னை, திருவள்ளூர் ராமபுரம் திருமலைநகர் பகுதியைச் சேர்ந்த சுதாகர், 35, என்பவரை நேற்று கைது செய்தனர்.இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கூறியதாவது:சுதாகர் உள்ளிட்ட கும்பல், பல்வேறு பெயர்களில் 'வாட்ஸ்ஆப்' வாயிலாக, ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி, நம்ப வைத்து பணம் பறித்து உள்ளனர். இந்த கும்பலில் சிக்கிய சஜீவ், ஜூலை 16 முதல் 25 வரையிலான தேதிகளில், பல்வேறு வங்கிக் கணக்குகள் வாயிலாக 5.10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். ஆனால், மோசடி கும்பல் கூறியது போன்று, பணம் கிடைக்காததால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, போலீசில் புகார் கொடுத்தார்.விசாரணையில், சென்னையை மையமாகக் கொண்டுள்ள வங்கி கணக்குகளுக்கு, இவர் பணம் அனுப்பியுள்ளது தெரிந்தது. சென்னை சென்று நடத்திய விசாரணையில், வங்கியில் கணக்கு வைத்துள்ள நிறுவனம் ஒரு மாதம் முன் மூடப்பட்டுள்ளது தெரிந்தது.அந்த நிறுவனத்தில் பணியாற்றிய நபரிடம் விசாரித்து, ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான சுதாகரை கைது செய்தோம். இந்நிறுவனத்தில் தொடர்புடைய மேலும் பலர் குறித்து விசாரணை நடக்கிறது, என்றார்.