உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆம்புலன்ஸ் நுழைய முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்பு தெற்கு மண்டலம், 88வது வார்டில்தான் இந்த கூத்து

ஆம்புலன்ஸ் நுழைய முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்பு தெற்கு மண்டலம், 88வது வார்டில்தான் இந்த கூத்து

கோவை:மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம், மேயர் ரங்கநாயகி தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடந்த முகாமில், பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து, 65 மனுக்களை பொது மக்கள் அளித்தனர். துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

உடனடி வங்கி கடன்

கோவை மாவட்ட மற்றும் கோவை மாநகராட்சி அனைத்து சாலையோர சிறு வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் அளித்த மனுவில், 'சாலையோர வியாபாரிகள் குழுவுக்கான தேர்தலை விரைவாக நடத்த வேண்டும். வங்கிக்கடனை காலதாமதமின்றி வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்க வேண்டும். காந்திபுரம், டாக்டர் நஞ்சப்பா ரோடு சாலையோர வியாபாரிகள் கடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. வறுமை நிலையில் வாழும் இந்த வியாபாரிகள், அதே இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டுகிறோம்' என தெரிவித்துள்ளனர்.

அடிப்படை வசதிகள்

முருகன் நகர்(விநாயகபுரம்)-சங்கரா நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில், 'மாநகராட்சி, 9வது வார்டு விளாங்குறிச்சிக்கு உட்பட்ட முருகன் நகர், 1-4 வீதிகளிலும், சங்கரா நகர், 1-3 வீதிகளிலும் விளாங்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்டதாக இருக்கும்போதே, முறைப்படி அனுமதி பெற்று வீடு கட்டி, 25 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். 2012ம் ஆண்டு மாநகராட்சியால் எங்கள் பகுதிக்கு ரோடு போடப்பட்டது. எங்கள் பகுதி வீட்டு வசதி வாரியத்தால் நில எடுப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறி, அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை. எனவே, மனைகளுக்கு தடையின்றி வரன்முறைப்படுத்துதல், புதிய கட்டடத்துக்கு அனுமதி, பழைய கட்டடத்தை அபிவிருத்தி செய்ய அனுமதி, புதிதாக தார் ரோடு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் வரமுடியாது!

மாநகராட்சி தெற்கு மண்டலம், 88வது வார்டுக்கு உட்பட்ட சண்முக கவுண்டர் வீதி மக்கள் அளித்த மனுவில், 'சண்முக கவுண்டர் வீதியில் சிலர், வீட்டின் முன் அமைத்துள்ள துணி துவைக்கும் கல், வாசற்படி உள்ளிட்ட கட்டுமானங்களால் ரோடு குறுகிவிட்டது. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், ஆட்டோ கூட வரமுடியாது. சிறுவாணி குடிநீர் குழாய் மீது பெரிய கல்லை வைத்து, வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு இடையூறு செய்கின்றனர். நான்கு சக்கர வாகனங்கள் வந்து சென்ற எங்கள் வீதியில், தற்போது மூன்று சக்கரம் கூட நுழைய முடியாது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை