உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க... கருத்து கேட்கறாங்க!அறிவிப்பு வெளியிடாததால் விவசாயிகள் அதிருப்தி

ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க... கருத்து கேட்கறாங்க!அறிவிப்பு வெளியிடாததால் விவசாயிகள் அதிருப்தி

பொள்ளாச்சி;ரேஷன் கடைகளில், தேங்காய் எண்ணெய் பெற விருப்பமா என கருத்து கேட்கப்படுகிறது. இது குறித்து முறையான தகவல் தெரியாததால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கோவை மாவட்டத்தில், 91,809 ெஹக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில், பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகம் உள்ளது.கடந்த சில ஆண்டுகளாக தேங்காய்க்கு விலை இல்லாதது, கொப்பரை கொள்முதல் செய்தும் விவசாயிகள் பயன் பெற முடியாத சூழல் போன்ற பல்வேறு பிரச்னைகளால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.மேலும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வெட்டி சாய்த்து, குறைந்த விலைக்கு விற்றனர். தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய வேண்டும்; கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.தேர்தல் வாக்குறுதியாக மட்டும் உள்ள ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் வினியோகம் என்ற அறிவிப்பு செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. இந்நிலையில், ரேஷன் கடைகளில், தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்யலாமா என மக்களிடம் கருத்து கேட்க அரசு உத்தரவிட்டுள்ளது.அதில், சிறப்பு பொதுவினியோக திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் ஒரு லிட்டர் பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் அரை லிட்டர் அளவில் வினியோகிப்பது குறித்து பொதுமக்களின் கருத்து என்ற படிவத்தில், தாலுகா பெயர், ரேஷன் கடை குறியீடு எண் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.ரேஷன் கார்டுதாரர் பெயர், ரேஷன் கார்டு எண் குறிப்பிட்டு, ரேஷன்கார்டுதாரர் கையொப்பம் இட்டு பெற வலியுறுத்தப்பட்டுள்ளது.கடந்த, இரண்டு மாதத்துக்கு முன் வந்த அறிவிப்பு இதுவரை முறையாக தகவல் தெரியாமல் உள்ளது. ரேஷன் கடைக்கு வருவோர் சிலரிடம் மட்டுமே இது குறித்து கருத்துக்கள் கேட்டறியப்படுகின்றன.இந்நிலையில், நேற்று சமூக வலைதளங்களில், 'ரேஷன் கடைகளில் பாமாயில் மற்றும் தேங்காய் எண்ணெய் பொதுமக்களின் தேர்வு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளது. தயவு செய்து தென்னை விவசாயிகள், அந்தந்த ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரைப்பதாக விண்ணப்பம் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்,' என பகிர்ந்து வருகின்றனர்.ஆனால், இது குறித்து முறையான தகவல் தெரியவில்லை எனவிவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

பொதுமக்களுக்கு அறிவிப்பு வையுங்க!

விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பத்மநாபன் கூறியதாவது:தேங்காய் எண்ணெய் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்வது குறித்து கருத்து கேட்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், இது குறித்து முறையான தகவல் கூறாதது வருத்தமாக உள்ளது. முறையான அறிவிப்பு வெளியிட்டு கருத்து கேட்டால், உண்மையான நிலவரம் தெரியும்.வெளியே சொல்லமால் ரகசியமாக சர்வே நடத்துவது; ஒரு சிலரிடம் மட்டுமே கருத்து கேட்பது பாமாயில் விற்பனைக்கு சாதகமாக உள்ளது. இது குறித்து பொதுமக்கள், விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ரேஷன் கடைகளின் முன், பாமாயில், தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.வரும், 15ம் தேதி கிராம சபையில், தேங்காய் எண்ணெய் வினியோகம், கள் இறக்க அனுமதி, கொப்பரைக்கு, 150 ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்ற ஊராட்சி நிர்வாகங்கள் முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ