அன்னூரில் இன்று விநாயகர் விசர்ஜன ஊர்வலம் சார் படங்கள் உண்டு
அன்னூர்:அன்னூர் தாலுகாவில், விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. அன்னூர் வட்டாரத்தில், ஹிந்து முன்னணி சார்பில், அன்னூர், கரியா கவுண்டனூர், மூக்கனூர், கணேசபுரம் உள்ளிட்ட 45 இடங்களில், நேற்றுமுன்தினம் அதிகாலை விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கணபதி ஹோமம் நடந்தது. நேற்று கோமாதா பூஜை நடந்தது.விழாவை ஹிந்து முன்னணி வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரதீப் குமார் துவக்கி வைத்தார். பாக்கியராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்தி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.இந்து மக்கள் கட்சி சார்பில், நிர்வாகிகள் மூன்று பேரின் வீட்டு வளாகத்தில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு விழா நடந்தது. பொதுமக்கள் சார்பில் 49 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. ஹிந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 45 விநாயகர் சிலைகள் இன்று மாலை 4:00 மணிக்கு, ஓதிமலை ரோட்டில் உள்ள பாத விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்படுகின்றன. முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் விநாயகர் கோவிலை அடைகிறது. அங்கிருந்து சிறுமுகை அருகே பவானி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன. விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், கோட்டை பாளையம், அத்திப்பாளையம், கோவில்பாளையம் உள்ளிட்ட 24 இடங்களில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இன்று மாலை விசாரசன ஊர்வலம் நடத்தப்பட்டு வெள்ளக்கிணறு குளத்தில் சிலைகள் கரைக்கப்படுகின்றன.