உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அகற்றாத மணல்; சறுக்கும் வாகனங்கள் உக்கடம் - ஆத்துப்பாலத்தின் அவலநிலை

அகற்றாத மணல்; சறுக்கும் வாகனங்கள் உக்கடம் - ஆத்துப்பாலத்தின் அவலநிலை

விபத்துகளை தடுக்கலாம்

மதுக்கரை மார்க்கெட் ரோடு, ரத்தினம் பள்ளி மேம்பாலம் அருகே அதிவேகத்தில் வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. சர்வீஸ் சாலையில் செல்வோர் பாதிப்படைகின்றனர். பாலத்தின் இறங்கும் பகுதியில் வேகத்தடை அமைத்தால் விபத்துகளை தடுக்கலாம்.- கார்த்திக், மதுக்கரை.

காட்சிப்பொருளாய் சோலார் விளக்கு

கிழக்கு மண்டலம், பீளமேடு, 24வது வார்டு, பி.ஆர்.புரம், சாஸ்திரி வீதியில், சோலார் தெருவிளக்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக விளக்கு பழுது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கையில்லை. பழுதான சோலார் விளக்கை விரைந்து சரிசெய்ய வேண்டும்- செல்வநாராயணன், பீளமேடு.

சாக்கடை அடைப்பு

பீளமேடு, நேருநகர், இரண்டாவது வீதி, பொதுக்கழிப்பிடம் அருகே, கவின் மளிகை கடை வீதியில், சாக்கடை கால்வாய்அடைத்து நிற்கிறது. கால்வாய் சரிவர துார்வாராததால் குப்பை, மண் நிறைந்துள்ளது. இதனால், கடும் துர்நாற்றமும், கொசுப்புழுக்கள் உற்பத்தியும் அதிகமாக உள்ளது.- முருகன், பீளமேடு.

மணலால் சறுக்கும் வாகனங்கள்

உக்கடம் - ஆத்துப்பாலம் புதிய மேம்பாலத்தில், சாலையின் இரு புறமும் மணல் அதிகமாக குவிந்துள்ளது. இருசக்கர வாகனங்களின் சக்கரம் மணலில் புதைகின்றன. மணலால் சறுக்கி கீழேயும் விழுகின்றனர். சீரான இடைவெளியில் மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பாலன், போத்தனுார்.

நாறும் குடியிருப்பு

நவாவூர் பிரிவு, நியூ கோல்டன் நகர் விரிவாக்கம் பகுதியில் குடியிருப்பிற்கு முன் அதிகளவில் குப்பை கொட்டப்படுகிறது. தொட்டிகள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கிறது. சுத்தம் செய்வதுடன் இங்கு மீண்டும் குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அமிர்தவர்சினி, நவாவூர் பிரிவு.

பழுதடைந்த சாலை

துடியலுாரில் - கோவை சாலை மிகவும் மோசமாக பழுதடைந்துள்ளது. சாலையின் பல பகுதிகளில் குழிகளாக உள்ளது. பெரிய வாகனங்கள் தடுமாறி செல்கையில், பைக்கில் செல்வோர் கீழே விழுகின்றனர். உயிர்சேதம் நிகழும் முன் சாலையை சீரமைக்க வேண்டும்.- மகேஷ், துடியலுார்.

சந்தையால் நெருக்கடி

காளப்பட்டி,நான்கு ரோட்டில் பிரதான சாலையை ஆக்கிரமித்து வாரச்சந்தை செயல்படுகிறது. சந்தை நடைபெறும் சமயங்களில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும், சந்தை முடிந்த பின்னர் குப்பையை அப்படியே சாலையோரம் வீசிச்செல்கின்றனர்.- குமார், காளப்பட்டி.

குழந்தைகளுக்கு ஆபத்தான குழி

கோவை மாநகராட்சி, 59வது வார்டு, காமராஜர் ரோடு மற்றும் இந்திரா கார்டன் செல்லும் வழியில், குழி ஒன்று உள்ளது. நடந்து செல்வோர் இந்தக்குழியில் கால் இடறி கீழே விழுகின்றனர். எதிர்ப்புறம் பள்ளி ஒன்றும் செயல் படுகிறது. சிறிய குழந்தைகளுக்கு இந்தக்குழி ஆபத்தாக உள்ளதால், சீரமைக்க வேண்டும்.- மகேந்திரன், சீனிவாச கார்டன்.

மிரட்டும் நாய்கள்

காளப்பட்டி, ஆண்டக்கபாளையத்தில் உள்ள வி.ஐ.பி., கிராண்ட் மெரிடியன் குடியிருப்பினுள் சுமார் 15 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள், சாலையில் செல்பவர்களை துரத்தி அச்சுறுத்துகின்றன. குழந்தைகள், முதியவர்களை நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிக்கிறது.- செல்வக்குமார், காளப்பட்டி.

குரைக்கும் நாய்களால் துாக்கமில்லை

சீரநாயக்கன்பாளையம், பொன்னுசாமி நகரில் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு குரைக்கின்றன. மேலும், இரவில் ஊளையிடும் நாய்களால் நிம்மதியாக துாங்க முடியவில்லை. இரவில் பைக்கில் செல்வோரையும் துரத்தி கீழே விழ வைக்கின்றன.- சங்கர், பொன்னுசாமி நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ