கடலை புண்ணாக்கு கரைசலால் காய்கறி மகசூல் அதிகரிக்கும்
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு வட்டாரத்தில் விவசாய பயிர் வளர்ச்சிக்கு கடலை புண்ணாக்கு கரைசல் கொடுக்க வேண்டும், என, இயற்கை விவசாயி தெரிவித்துள்ளார்.ஆடி பட்டதை முன்னிட்டு, தற்போது கிணத்துக்கடவு பகுதியில் விவசாயிகள் பந்தல் காய்கறிகள் பயிரிட துவங்கியுள்ளனர். இதில், பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்க கடலை புண்ணாக்கு கரைசல் கொடுக்க வேண்டும் என, இயற்கை விவசாயி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.இதில், ஆடி பட்டத்தில் வெயிலின் அளவு அதிகமாக இருந்தது. கோடை மழையும் குறைவாக இருந்ததால், தற்போது பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இதை சரி செய்ய விவசாயிகள், கடலை புண்ணாக்கு கரைசலை உபயோகிக்க வேண்டும். இதை பயிருக்கு அடி உரமாக கொடுக்க வேண்டும்.இதில், நைட்ரஜன், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருப்பதால், பயிர்கள் நன்கு வளர்ச்சி அடையும். மேலும், ரசாயன உரமாக இருப்பின் விலையும் அதிகம், விளைச்சலும் பாதிக்கப்படும். இதற்கு மாற்றாக, கடலை புண்ணாக்கு கரைசல் போன்ற இயற்கை உரத்தை பயன்படுத்தும் போது, விளைச்சலும் அதிகம், செலவும் குறைவு, என்றார்.