வீணாகும் தெளிப்பு இயந்திரம் ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம்
உடுமலை;கிராமங்களில், கிருமிநாசினி தெளிக்க வாங்கிய, டிராக்டர் மற்றும் இயந்திரம், பயன்பாடு இல்லாமல், உடுமலை ஒன்றிய அலுவலகத்தில், துருப்பிடித்து வீணாகி வருகிறது.இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில், பல்வேறு சுகாதார பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை என முன்பு புகார் எழுந்தது. மேலும், 'கோவிட்' பெருந்தொற்று காலத்தில், கிராமங்களில், நோய்த்தடுப்பு பணிகளில் தொய்வு நிலவியது.இதையடுத்து, இப்பணிகளுக்காக, உடுமலை ஒன்றிய பொது நிதியின் கீழ், டிராக்டர் மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம் வாங்கப்பட்டது.டிராக்டரில் பொருத்தப்பட்ட இந்த இயந்திரம் வாயிலாக, கிராமங்களில், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கொசு ஒழிப்பு பணிகளுக்கும் இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக, இந்த இயந்திரத்தை பயன்படுத்தவில்லை.இதனால், ஒன்றிய அலுவலகத்தில், டிராக்டர் மற்றும் கிருமிநாசினி தெளிப்பு இயந்திரம், துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி வருகிறது. பல லட்ச ரூபாய் அரசு நிதியில் வாங்கிய இயந்திரங்கள் வீணாகி வருவது குறித்து ஒன்றிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.அவ்வப்போது, டிராக்டர் மற்றும் இயந்திரத்தை இயக்கியிருந்தால், துருப்பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது. அரசு நிதி முற்றிலுமாக வீணாகும் நிலையை தவிர்க்க, உடனடியாக டிராக்டர் மற்றும் இயந்திரத்தை பராமரித்து, கொசு மருந்து தெளிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதில், ஒன்றிய அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.