கோவை;கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களில் சிலர், வாகன சோதனையில் தீவிரம் காட்டுவதில்லை என்கிற புகார் எழுந்திருக்கிறது. இதுவரை ஒரு முறை கூட, எந்த பொருளும் பறிமுதல் செய்யாத குழுவினருக்கு, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.கோவை மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 24 மணி நேரமும் பணிபுரியும் வகையில், மூன்று ஷிப்ட்டுகள் போடப்பட்டு, ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று குழுக்கள் வீதம், 30 பறக்கும் படைகள் மற்றும், 30 நிலையான கண்காணிப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டன. அதன்பின் மேலும், 30 குழுக்கள் அமைக்கப்பட்டன.அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டது; 360 டிகிரி கோணத்தில் சுழலும் கேமரா பொருத்தப்பட்டது. இவ்வாகனங்களின் இயக்கம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டது. இதுவரை 328 வழக்குகள் பதிவு
பறக்கும் படையை சேர்ந்த குழுவினர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு இடத்தில் வெகுநேரம் நின்றிருந்தால், கட்டுப்பாட்டு அறையில் இருந்து விளக்கம் கோரப்படும். நிலையான கண்காணிப்பு குழுவினர், முக்கியமான ஏதேனும் ஓரிடத்தில் முகாமிட்டு, அவ்வழியாக வரும் வாகனங்களை சோதனையிடுவர்.நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாளில் இருந்து, 11ம் தேதி வரை, 328 வழக்குகள் பதியப்பட்டு, 12 கோடியே, 24 லட்சத்து, 90 ஆயிரத்து, 805 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், சில சட்டசபை தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட, பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர், இதுவரை பறிமுதல் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை. அனுப்பினார் நோட்டீஸ்
பறிமுதல் செய்யாத குழுக்களின் செயல்பாட்டில், தேர்தல் ஆணையத்துக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குழுவினருக்கு விளக்கம் கேட்டு, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர், தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'கோவை மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களில் பணிபுரியும், 70க்கும் மேற்பட்ட அலுவலர்களுக்கு, 'ஏன் வாகன சோதனையில் பணம் கைப்பற்றவில்லை' என, விளக்கம் கோரப்பட்டுள்ளது. விளக்கத்தின் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.'தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களின், பணிகளை அவமதிக்கும் செயல்பாடாகவும், பணம் கைப்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு, இயற்கை நியதிக்கு மாறாகவும் இருக்கிறது. இதை கண்டிக்கிறோம். விளக்கம் கேட்டு அனுப்பிய நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு கடுமையான மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது' என கூறப்பட்டுள்ளது.
நோட்டீஸ் யார், யாருக்கு?
மேட்டுப்பாளையம் தொகுதிக்கு நான்கு பறக்கும் படைகள், சூலுார் தொகுதியில் ஐந்து பறக்கும் படைகள், மூன்று நிலையான கண்காணிப்பு குழுக்கள், கவுண்டம்பாளையம் தொகுதியில் ஆறு பறக்கும் படைகள், நான்கு கண்காணிப்பு குழுக்கள், கோவை வடக்கு தொகுதியில் ஐந்து பறக்கும் படைகள், எட்டு கண்காணிப்பு குழுக்கள், தொண்டாமுத்துார் தொகுதியில் மூன்று பறக்கும் படைகள், நான்கு கண்காணிப்பு குழுக்கள், கோவை தெற்கு தொகுதியில் ஒரு பறக்கும் படை, ஒரு கண்காணிப்பு குழு, சிங்காநல்லுார் தொகுதியில் ஐந்து பறக்கும் படைகள், எட்டு கண்காணிப்பு குழுக்கள், கிணத்துக்கடவு தொகுதியில் நான்கு பறக்கும் படைகள், மூன்று கண்காணிப்பு குழுக்கள், பொள்ளாச்சி தொகுதியில் ஒரு கண்காணிப்பு குழுவுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.