கருமத்தம்பட்டி;கிட்டாம்பாளையம் நால்ரோட்டில் விபத்துக்கள் அடிக்கடி நடப்பதால், ரவுண்டானா அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. கருமத்தம்பட்டியில் இருந்து அன்னுார் செல்ல, மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த ரோட்டை ஒட்டி, ராயர்பாளையம், தண்ணீர் பந்தல், கிட்டாம்பாளையம், வலையபாளையம், மோளகாளிபாளையம், காடுவெட்டிபாளையம், பதுவம்பள்ளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. திருச்சி ரோடு, அவிநாசி ரோட்டில் இருந்து மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் செல்ல இந்த ரோட்டில்தான் செல்ல வேண்டும். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த ரோட்டில் சென்று வருகின்றன. இதனால், கிராம சாலைகள் சந்திக்கும் இடங்களில் விபத்துகள் அதிகரித்துள்ளன.குறிப்பாக, கிட்டாம்பாளையம் நால் ரோட்டில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து, அன்னுார் ரோடு, வாகராயம்பாளையம் ரோடு, கிட்டாம்பாளையம் ரோடுகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் பேரி கார்டுகள் வைக்கப்பட்டன. ஆனாலும், அன்னூர் ரோட்டில் வரும் வாகனங்களால் விபத்துக்கள் தொடர்கின்றன. இதையடுத்து, நால்ரோட்டில் ரவுண்டானா அமைக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கிட்டாம்பாளையம் ஊராட்சி தலைவர் சந்திரசேகர் கூறுகையில், ''நால்ரோட்டில் வேகத்தடைகள், பேரி கார்டுகள் அமைத்த பிறகும், விபத்துகள் தொடர்கின்றன. போலீசார் உதவியுடன் சிக்னல்கள் அமைக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக நால் ரோடு பஸ் ஸ்டாப் அருகே உள்ள இரு மரங்களை வெட்ட, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு எட்டு மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த பலனும் இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னும் விபத்து ஏற்பட்டது. அந்த இடத்தில் ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.