உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லங்கா கார்னர் பிரச்னைக்கு விடியல் பிறக்குமா? ரூ.96 கோடி கேட்டு காத்திருக்கிறது மாநகராட்சி

லங்கா கார்னர் பிரச்னைக்கு விடியல் பிறக்குமா? ரூ.96 கோடி கேட்டு காத்திருக்கிறது மாநகராட்சி

கோவை, : கோவையில் எப்போது மழை பெய்தாலும், லங்கா கார்னர், அவிநாசி ரோடு பாலம், கிக்கானி பாலம், காளீஸ்வரா மில் பாலங்களுக்கு கீழ் தண்ணீர் தேங்குவது வாடிக்கை. கடந்தாண்டு மழை நீர் தேங்கியதால், இரண்டு உயிர் பலி ஏற்பட்டது. இன்னும் சில நாட்களில், தென்மேற்கு பருவக்காற்று வீச ஆரம்பிக்கும்; தென்மேற்கு பருவ மழை எதிர்பார்ப்பை காட்டிலும் அதிகமாக பெய்ய வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.கோவை நகர் பகுதியில், சிறிது நேரம் கன மழை பெய்தாலே, தண்ணீர் தேங்குவது வழக்கம். இதுபோன்ற பிரச்னை தொடராமல் இருக்க மாநகராட்சியில் இருந்து, 96 கோடி ரூபாய்க்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதில், அவிநாசி ரோடு ரயில்வே பாலத்தின் கீழே தேங்கும் தண்ணீரை 'பம்ப்' செய்து, அருகில் உள்ள ரயில்வே இடத்தில் மெகா சைஸ் கிணறு தோண்டி, அதில் மழை நீரை சேகரித்து, அங்கிருந்து வாலாங்குளம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல், லங்கா கார்னரில் இருந்தும் வாலாங்குளத்துக்கு தண்ணீர் செல்லும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செல்வ சிந்தாமணி குளத்தின் உபரி நீர், குடியிருப்புகளுக்குள் புகாத வகையில், உக்கடம் பெரிய குளம் வரை, ரோட்டுக்கு கீழ் கான்கிரீட் வாய்க்கால் கட்டுவற்கு திட்டமிடப்பட்டது. இப்பணிகளுக்கு நிதி கேட்டு, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது; இன்னும் நிதி ஒதுக்காததால், இதுவரை எந்த பணியும் நடைபெறவில்லை. இவ்வாண்டு மழை பெய்தாலும், கடந்தாண்டு ஏற்பட்ட பாதிப்பு தொடரக்கூடிய சூழல் இருக்கிறது. தண்ணீர் தேங்கினால், உடனடியாக 'பம்ப்' செய்வதற்கும், மாற்று ஏற்பாடுகள் செய்யவும் மாநகராட்சி தயாராக இருக்கிறது.இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''ரூ.96 கோடி கேட்டு கருத்துரு அனுப்பியுள்ளோம்; நிதி ஒதுக்க தமிழக அரசு தயாராக இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் வடிகால் கட்டுவதற்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கருத்துரு அனுப்பியதில் ஒரு பகுதி நிதி ஒதுக்கினால் கூட, லங்கா கார்னர், அவிநாசி ரோடு, கிக்கானி பாலங்களில் வேலையை துவக்கி விடலாம். மற்ற பகுதிகளில் படிப்படியாக செய்யலாம். தென்மேற்கு பருவ மழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை