உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனையில் ஆடை இலவசமாக பெற்று அணியலாம்!

அரசு மருத்துவமனையில் ஆடை இலவசமாக பெற்று அணியலாம்!

கோவை,; கோவை அரசு மருத்துவமனையில், 'அன்பின் ஆடைகள்' எனும் திட்டம், கடந்த ஜன., முதல் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்துசெயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் வாயிலாக, நோயாளிகளுக்கு ஆடைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் பல ஆதரவற்ற, ஏழை எளிய நோயாளிகள், சிகிச்சை பெறுகின்றனர். இதில், அவசர சூழலில் வரும் பலர் ஆடைகள், போர்வை எடுக்காமல் வருகின்றனர். சிலர் மாற்று உடைகளே இல்லாமல் உள்ளனர்.இவர்களுக்கு உதவும் வகையில், புரோபெல் மற்றும் ஹெல்பிங் ஹார்ட்ஸ் தன்னார்வ அமைப்புகள், கோவை அரசு மருத்துவமனையுடன் இணைந்து, 'அன்பு ஆடைகள்' என்ற மையத்தை துவக்கியுள்ளனர்.இம்மையத்தில், உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் மருத்துவமனையின் சீட்டை காண்பித்து ஆடையை பெற்றுக்கொள்ளலாம். அரசு மருத்துவமனையில், நுாற்றாண்டு கட்டடத்தின் தரைத்தளத்தில், இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது.ஹெல்பிங் ஹார்ட்ஸ் அமைப்பின் சி.இ.ஓ., கணேஷ் கூறுகையில், ''பொதுமக்கள் ஒரு முறை பயன்படுத்திய ஆடைகள், புதிதாக வாங்கி சைஸ் சரியில்லை என்று பயன்படுத்தாமல் உள்ள ஆடைகள், நல்ல நிலையில் உள்ள ஆடைகளை, தானமாக கொடுக்கலாம். இந்த ஆடைகளை, ஓசூர் அனுப்பப்பட்டு மறுசீரமைப்பு செய்து, சலவை செய்து மீண்டும் புதிது போன்று, அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கின்றோம். பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தேவையான ஆடைகள் இருக்கும். ஆடைகள் தானமாக கொடுக்க விரும்புபவர்களிடம், அரசு மருத்துவமனையில் பெற இயலாது; 63747 13775 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ