உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  10 கி.மீ. சுற்றுக்கு வீசுகிறது குப்பை துர்நாற்றம்: வெள்ளலுார் பகுதி மக்கள் அதிருப்தி

 10 கி.மீ. சுற்றுக்கு வீசுகிறது குப்பை துர்நாற்றம்: வெள்ளலுார் பகுதி மக்கள் அதிருப்தி

கோவை: வெள்ளலுார் குப்பை கிடங்கில் இருந்து முன் எப்போதும் இல்லாத அளவுக்கு துர்நாற்றம் வீசி வருகிறது. போத்தனுார், வெள்ளலுார் மற்றும் சுற்றியுள்ள, 10 கி.மீ. துாரத்தில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது. குறிச்சி - வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன் அறிக்கை: வெள்ளலுார் குப்பைக்கிடங்கு பிரச்னை குறித்து, மாநகராட்சி கமிஷனரை தொடர்பு கொண்டு தெரிவித்தபோது, 'ஆள் அனுப்புகிறேன்' என்கிற பதிலோடு முடித்து விடுகிறார். பொறுப்புள்ள உயர் பதவியில் உள்ள அதிகாரியிடம் இருந்து, இத்தகைய அலட்சியமான பதில் ஏற்றுக் கொள்ள முடியாதது. சுத்தமான காற்று, சுகாதாரமான சூழலில் வாழும் உரிமை இப்பகுதி மக்களுக்கு முற்றிலும் மறுக்கப்படுகிறது. 2018ல் பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கின் விசாரணையில், மாநகராட்சி தரப்பில் பொய்யான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பழைய குப்பையை அகற்ற, பலமுறை பசுமை தீர்ப்பாயம் அவகாசம் அளித்தும், இன்று வரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. புதிதாக குப்பை கொட்டக் கூடாது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுகளை, மாநகராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருகிறது. பசுமை தீர்ப்பாயத்தில் நடந்து வரும் வழக்கின் விசாரணை, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியின்றி செயல்படும் குப்பை கிடங்கை அகற்ற உத்தரவிடப்படும் என்கிற நம்பிக்கையில், இப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இம்மாதம் நடந்த வழக்கு விசாரணையில் அளித்த உத்தரவு நகல் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டிருக்கிறது. அந்த உத்தரவில், 'புதிய குப்பையையும் வெள்ளலுார் கிடங்கிற்கு கொண்டு செல்வதால், பழைய குப்பையை அகற்றும் பணி மேலும் தாமதமாகிறது. ஒப்பந்ததாரருக்கு அதிகாரிகள் அபராதம் விதிக்கின்றனரே தவிர, பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுப்பதில்லை. தெளிவான காலக்கெடுவுடன் செயல் திட்ட அறிக்கையை, மாநகராட்சி சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரிகள் சமர்ப்பிக்கும் முன்னேற்ற அறிக்கை, திருப்திகரமாக இல்லாவிட்டால், தினமும் புதிதாக சேகரமாகும் கழிவுகளை, சட்டப்படி அனுமதி பெற்ற வேறிடங்களில் கையாள, மாநகராட்சி தயாராக இருக்க வேண்டும்' என, நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ