5க்கு பதில் 10 ரூபாய் டிக்கெட்; தனியார் பஸ்சுக்கு நோட்டீஸ்
கோவை; கோவை நகர டவுன் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம், 5 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு பஸ்களில் அதன்படி வசூலிக்கின்றனர். ஆனால், சில தனியார் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம், 10 ரூபாயாக வசூலிக்கப்பட்டது. இது குறித்த செய்தி நமது நாளிதழில் வெளியானது. இதையடுத்து, கோவை-சத்தி சாலையில் நேற்று மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் விஸ்வநாதன், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் பஸ்களை நிறுத்தி சோதனை செய்தனர். 38ம் நம்பர் பஸ்சில் குறைந்தபட்ச கட்டணமாக 10 ரூபாய், அடுத்த நிறுத்தத்துக்கு 15 ரூபாய் என வசூலித்தது தெரிந்தது. உக்கடம் வரை பஸ் இயக்காமல், காந்திபுரத்தோடு திரும்புவதும் தெரியவந்தது. பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ”கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரைக்கப்படும்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.