விதிமீறி கிராவல் மண் அள்ளிய 100 பேருக்கு ரூ.50 கோடி அபராதம்
கோவை:கோவை மாவட்டம், பேரூர் தாலுகாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை ஒட்டி, வருவாய்த்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களிலிருந்து டன் கணக்கில், லாரிகளில் கிராவல் மண் கடத்தப்பட்டது. இது தொடர்பாக, இயற்கை ஆர்வலர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.கோர்ட் பிறப்பித்த உத்தரவையடுத்து, கோவை தெற்கு கோட்டாட்சியரால், 100 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள், 50 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை தெற்கு கோட்டாட்சியர் ராம்குமார் கூறுகையில், ''கனிமவள கொள்ளை தொடர்பாக கோர்ட் உத்தரவை செயல்படுத்துகிறோம். அபராதம் செலுத்த மறுத்து, 28 பேர் கலெக்டரிடம் மேல்முறையீடு செய்துள்ளனர். ''அவர்கள் விண்ணப்பங்களை ஏற்று, மறு ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்,'' என்றார்.