இன்ஸ்பயர் திட்டத்தில் கோவையில் இருந்து 1,200 கண்டுபிடிப்புகள் பதிவு
கோவை; கோவையில் இருந்து, மத்திய அரசின் 'இன்ஸ்பயர்' விருதுக்கு, பள்ளி மாணவர்கள் அதிகளவில் பதிவு செய்துள்ளனர். மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் 'இன்ஸ்பயர் -மானக்' விருது வழங்கி வருகிறது. அதன்படி, ஒரு பள்ளியிலிருந்து 6 முதல் 10ம் வகுப்பு வரை 3 மாணவர்களும், 11 மற்றும் 12ம் வகுப்பு அறிவியல் பிரிவில் இருந்து, 2 மாணவர்களும் என மொத்தம் 5 மாணவர்களை விருதுக்கு பதிவு செய்யலாம். உயர்நிலைப்பள்ளியாக இருந்தால், 6 முதல் 10ம் வகுப்பு வரை 5 மாணவர்கள் பதிவு செய்யலாம். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், 'புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது' ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை, அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்தாண்டு, கோவை மாவட்டத்தில் இருந்து மட்டும், 1,200 புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்ட அறிவியல் அலுவலர் அகிலன் கூறுகையில், மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்த, மாவட்ட பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து செயல்படுகிறோம், என்றார். இதற்கிடையில், 'இன்ஸ்பயர்' அறிவியல் திட்டத்தின் கீழ், அதிக மாணவர்களை பங்கேற்க செய்யும் நோக்கில், சமீபத்தில் சென்னை பிர்லா கோளரங்கத்தில் மாநில அளவிலான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை உட்பட, 38 மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். கோவையிலிருந்து அதிகளவில் விருதுக்கு பதிவு செய்ததற்காக, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.