உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மூடப்பட்ட 13 பார்களை திறக்க அனுமதி வரவில்லை

மூடப்பட்ட 13 பார்களை திறக்க அனுமதி வரவில்லை

கோவை: விதிமீறல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட எப்.எல்.2 பார்களை, காலக்கெடு முடிந்த பின்பும் மீண்டும் திறக்க அனுமதி மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மாவட்டத்தில் 118 எப்.எல்.2 (மனமகிழ் மன்றம்) பார்கள் உள்ளன. இவை விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா என அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில், உறுப்பினர்கள் அல்லாதோருக்கு மது விற்பனை செய்வது, உரிய உரிமம் இல்லாதது, பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது, அனுமதி பெறாத இடத்தில் மது வினியோகிப்பது மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. எச்சரித்தும் சரி செய்யாததால் மதுக்கரை, விளாங்குறிச்சி, பீளமேடு, பேரூர், சூலூர், கே.என்.ஜி.புதூர், நேரு நகர், கணபதி, மாதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 13 எப்.எல்.2 பார்கள் தற்காலிகமாக பூட்டி சீல் வைக்கப்பட்டன. விதிமீறல்களின் தன்மைக்கு ஏற்ப 30 முதல் 90 நாட்கள் வரை இந்த பார்களை மூட உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், 30 நாட்கள் காலக்கெடு முடிந்த பிறகும், பார்களை மீண்டும் திறக்க அதிகாரிகள் அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதாக பார் உரிமையாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கலால்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தலைமையகத்தில் இருந்து அனுமதி கிடைத்தவுடன், பார்கள் திறக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ