ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 14 பேர் தேடப்படும் குற்றவாளிகள்
பொள்ளாச்சி; ரேஷன் அரிசி கடத்திய வழக்குகளில், கோர்ட்டில் ஆஜராகாத 14 பேர், தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். ரேஷன் அரிசி கடத்தலை கண்டறிந்து தடுக்க, குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், ரேஷன் அரிசி கடத்தும் நபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்குகள் கோவை குற்றவியல் நீதித்துறை கோர்ட் 4ல், நடக்கிறது. இந்நிலையில், ரேஷன் அரிசி கடத்தியதாக கைதான திருநெல்வேலியைச் சேர்ந்த சரவணன், 28, என்பவர், கோவை செல்வபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவர், மீதான வழக்கில், கோர்ட்டில் ஆஜராகாமல் உள்ளார். இதேபோல, மதுரையைச் சேர்ந்த சிக்கந்தர்பாட்சா, 45; கோவையைச் சேர்ந்த சபீர், சலீம், இம்ரான்கான், சதீஷ், முபாரக், ஜூபர், ரபீக், பாபு; திண்டுக்கல்லை சேர்ந்த பாலமுருகன், சுல்தான்பேட்டையைச் சேர்ந்த சஞ்சீவ், பழநியைச் சேர்ந்த பாண்டியன், பொள்ளாச்சி தனசேகரன் ஆகியோர் மீதும் கோர்ட்டில் விசாரணை நடக்கிறது. இவர்கள், கோர்ட்டில் ஆஜராகாமல் இருப்பதால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். எனவே, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், கோர்ட்டில் நேரிலோ அல்லது வக்கீல் வாயிலாகவோ ஆஜராக வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது என, குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுதுறை போலீசார் தெரிவித்துள்ளனர்.