154 ஆவின் முகவர்களுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. சான்று
கோவை; கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் ஆவின் நிறுவனம் சார்பில், முகவர்களுக்கு பயிற்சி மற்றும் சான்றிதழ் பதிவு முகாம், ஆர்.எஸ்.புரம் ஆவின் அலுவலகத்தில் நடந்தது. உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா, பயிற்சியை துவக்கி பேசியதாவது: பால் முகவர்களில், 500 லிட்டருக்கு குறைவாக விற்பவர்கள் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு, அதற்கு மேல் விற்பவர்கள் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். காலையில் வினியோகித்த பின், மீதமுள்ள பாலை விதிமுறைப்படி, பாதுகாப்பாக வைத்திருந்து, மாலையில் வினியோகிக்க வேண்டும். கடை வைத்திருப்பவர்கள் சுகாதாரமாகவும், அனைத்து உணவு பாதுகாப்பு தர விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சான்றிதழ் வைத்திருக்கும் பலர், 500 லிட்டருக்கு மேல் வியாபாரம் மேம்படும்போது, அதை சமர்ப்பித்து விட்டு, உரிமம் பெற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். நிகழ்வில், 154 முகவர்கள் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சான்றிதழ் பெற்றனர். உணவு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆவின் மேலாளர் சாந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.