உக்கடத்தில் வீடு ஒதுக்குங்க 16 குடும்பத்தினர் முறையீடு
கோவை, ; ஊட்டி செல்வதற்காக விமானம் வாயிலாக, கோவை வந்த முதல்வர் ஸ்டாலினை வரவேற்க கலெக்டர் சென்றிருந்ததால், கோவை கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., ஷர்மிளா தலைமையில், பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம் நேற்று நடந்தது.தெற்கு, வடக்கு கோட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து தாலுகா தாசில்தார்கள் உட்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 415 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 13 பேருக்கு சீர்மரபினர் உறுப்பினர் சேர்க்கைக்கான நலவாரிய அட்டை, தாட்கோ மூலமாக துாய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களின் 12 குழந்தைகளுக்கு கல்லுாரி படிப்பதற்காக, தலா, 1,500 ரூபாய் கல்வி உதவித்தொகை, உயிரிழந்த துாய்மை பணியாளரின் வாரிசுக்கு ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை டி.ஆர்.ஓ., வழங்கினார். சூறாவளியால் நஷ்டம்
அப்போது, மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில், 'சிறுமுகை, ஜடையம்பாளையம், இலுப்ப நத்தம், இரும்பறை, சின்ன கள்ளிப்பட்டி, சிக்கதாசம்பாளையம், வெள்ளியங்காடு ஆகிய கிராமங்களில், மே 1ல் வீசிய சூறாவளி காற்றால், ஐந்து லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்தன. வருவாயை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு, ஒரு மரத்துக்கு, 100 ரூபாய்க்கு குறையாமல் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' என முறையிட்டுள்ளனர். வீடு வேண்டும்
வைசியாள் வீதியில் வசிக்கும் பாப்பாத்தி கொடுத்த மனுவில், 'உக்கடம் சி.எம்.சி., காலனியில் குடும்பத்தோடு வசித்தோம். மேம்பாலப் பணிக்காக வீட்டை காலி செய்தோம். பயனாளிகளுக்கான பங்களிப்பு தொகையை, மாநில நெடுஞ்சாலைத்துறை வழங்கியது. 16 குடும்பத்தினருக்கு உக்கடத்தில் வீடு கொடுக்க உறுதியளிக்கப்பட்டது.நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஏற்கனவே வழங்கிய அடையாள அட்டை, கடித நகல் இணைத்துள்ளோம். தற்போது கட்டியுள்ள, 222 வீடுகளின் பயனாளிகள் பட்டியலில் எங்களை சேர்க்காமல் உள்ளனர். எங்கள் மனுவை பரிசீலித்து, வீடுகள் ஒதுக்க வேண்டும்' என கோரியுள்ளார்.