மேட்டுப்பாளையம் சாலையில் வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக 3 ஆயிரம் மரக்கன்றுகள்
மேட்டுப்பாளையம்: அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலையில் வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக 3 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, முதல் கட்டமாக 100 மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டன.மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் வழியாக அவிநாசி வரை உள்ள சாலை, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்டதாகும். இந்த சாலை வழியாக தினமும் 4,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையை தரம் உயர்த்தி, புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அவிநாசியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை 38 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள இந்த சாலையை, நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தி, தமிழக அரசு அறிவித்தது. கோவை கோட்ட மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், விரைவில் அதற்கான பணிகள் துவங்க உள்ளன. இந்த சாலை விரிவாக்க பணிகளுக்காக, 800-க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் வெட்டப்பட உள்ளன.இந்த மரங்களுக்கு ஈடாக புதிதாக மரக்கன்றுகளை நட மாநில நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர். முதல் கட்டமாக நேற்று இச்சாலையில் தென் திருப்பதி நால் ரோட்டில் வேம்பு, மகாகனி என பல்வேறு வகையிலான 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.இதுகுறித்து மேட்டுப்பாளையம் உட்கோட்ட மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி ரஜினிகாந்த் கூறியதாவது:-மேட்டுப்பாளையம் அவிநாசி இடையிலான சாலையில் சுமார் 3,000 மரக்கன்றுகள் நட முடிவு செய்துள்ளோம். இதற்காக முதல் கட்டமாக நேற்று தென்திருப்பதி நால் ரோட்டில் பல்வேறு வகையான நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மரங்கள் வெட்டப்படுவதற்கு, முன்பாகவே அதற்கு ஈடாக மரக்கன்றுகள் நெடுஞ் சாலைத்துறையினரால் நடப்பட்டுள்ளது. இந்த முயற்சி மிகவும் வரவேற்கதக்கது. எதிர்காலங்களில் இது போன்று மரங்கள் வெட்டப்படும் போது, அதற்கு முன்பாகவே அதற்கு ஈடாக, மரக்கன்றுகளை நட வேண்டும், என்றனர்.